Home சினிமா கலையை கலையாக பாருங்க ஜென்டில்மென்

கலையை கலையாக பாருங்க ஜென்டில்மென்

by admin
தி பேமிலி மேன் என்ற ஓ.டி.டி., தொடர் இரண்டாம் பாகம், சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் டிரைலர் வெளியான போதே, சர்ச்சை ஆரம்பித்தது. இந்த இரண்டாம் பாகம், விடுதலை புலிகளை கதையில் இணைத்தது தான் வினை. வைகோ துவங்கி, சீமான் வரை புலிகளுக்கு ஆதரவான குரல்கள் பலவும் எதிர்க்க துவங்கி, தமிழக அரசே மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, இத்தொடரை நிறுத்த கோரும் அளவுக்கு இதில் என்ன பிரச்னை? தற்சமயம், இத்தொடர் ஹிந்தியில் மட்டுமே வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்தை போல தமிழ் ஆடியோவும், சப்டைட்டிலும் இன்னும் இணைக்கப்படவில்லை.
எதிர்ப்பு தேவையா?
இரண்டாம் பாகமாக வெளியாகி, ஒன்பது பகுதிகள் உடைய இத்தொடர், பிரபாகரன் – ரியலில் பாஸ்கரன் என்ற பெயரில் – ஒருவேளை தப்பித்திருந்தால் எப்படி இருந்திருக்கும். போராளியான அவர், அடுத்தபடியாக போராட்டத்தை எப்படி எடுத்துச் சென்றிருப்பார் என, கற்பனையாக கொண்டு செல்கிறது. இங்கே தொடருக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள், விடுதலை புலிகளை எப்படி தீவிரவாதிகளாக காட்டலாம் எனக் கேட்கின்றனர்.
விடுதலை புலிகள், பயங்கரவாதத்தை கையில் எடுக்காதவர்கள் என்று சொன்னால், அது நகைப்புக்குரியது. சிங்களவர்களை மட்டுமின்றி, சக தமிழ் அமைப்புகள், போராளிகள் என்று பலரையும், ஒழித்துக் கட்டியபடி இருந்த இயக்கம் அது. விடுதலை புலிகளின் அரசியலை பேசுவது இங்கே நோக்கமல்ல. ஒரு கலைப் படைப்புக்கு இத்தனை எதிர்ப்பு தேவையா என்பதே கேள்வி!
பொதுவாக கருத்து சுதந்திரம்,படைப்பு சுதந்திரம், கலை என்று பேசுவோர், இது போன்ற பிரச்னைகளின் போது காணாமல் போய் விடுகின்றனர். சீதை, ராவணனை விரும்பினாள் என்பது போல படம் எடுத்தால், அது கருத்து சுதந்திரம். சரஸ்வதி தேவியை நிர்வாணமாக படம் வரைந்தால், கருத்து சுதந்திரம். ஆனால், 10 – 12 ஆண்டுகளுக்கு முன், முடிந்து போன இயக்கத்தை பற்றி கற்பனை செய்தால், அது ஆகாது என்றால், என்ன அர்த்தம்? உடனே ஈழ உணர்வு, தமிழ் உணர்வு என்று இதை எடுத்துச் செல்வது சரியல்ல.
பேமிலி மேன் என்பது, உள்ளதை அப்படியே சொல்ல முயற்சிக்கும் ஆவணப் படம் அல்ல; ஈழப் போராட்டம் என்பது யாரும் பேசக்கூடாத பொருளுமல்ல. இன்னொரு தயாரிப்பாளர், ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாக, உரிய வகையில் ஒரு திரைப்படமோ, சீரியலோ எடுக்கட்டுமே!
இது போன்ற சீரியல்கள் வருவது, ஒரு மாற்றுப் பார்வையை வைத்து விடுமோ; எங்கே இங்கு கட்டமைத்து இருக்கும் பிரசாரத்துக்கு எதிரான ஒரு கருத்து ஏற்பட்டு விடுமோ என்று, பதற்றம் அடைவது வீண். வரலாற்றில் நடந்த சம்பவங்கள், வேறு மாதிரி நடந்திருந்தால்… என்று கற்பனை செய்வது திரைத்துறையில் புதிதல்ல. இவை, மாற்று வரலாற்று திரைப்படங்கள் என்ற வகையைச் சேர்ந்தவை.
விழிபிதங்கி நிற்கும் கலைத்துறை
ஆங்கிலம் உள்ளிட்ட பல சர்வதேச மொழிகளில், பல திரைப்படங்கள் இவ்வாறு வரலாற்றை, வேறு மாதிரி கற்பனை செய்து வந்துள்ளன. தமிழில் அவ்வாறு மாற்று வரலாற்று திரைப்படங்கள் சிறு முயற்சி என்ற அளவில் கூட ஏற்படாததற்கு காரணம், இங்கே ஏற்படும் உணர்வு கொந்தளிப்பும், பதற்றமும், அதற்கு பிந்தைய போராட்டங்களும் தான்.
ஆண்டுக்கு, 1,000த்திற்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்கக் கூடிய வலுவான துறை, தமிழ் திரைப்பட துறை. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை, விடலை பருவக் காதலைக் காட்டி, மினிமம் காரன்டி தரும் படங்கள். பெரிய ஹீரோக்கள்நடித்தாலும், ஒரே சட்டகத்தை மீறாமல் எடுக்கப்படும் படங்களே அதிகம்.அபூர்வமாக இதிலிருந்து மீறி, ஏதாவது படங்கள் வந்தால், ஒன்று அது வெளிவந்த அன்றைக்கே பெட்டியில் முடங்கி விடும் அல்லது ஏதாவது ஒரு கட்சியோ, இயக்கமோ எதிர்ப்பு தெரிவித்து முடக்கி விடும். இதனால், ஒரே மாதிரியான படங்களே தயாரிக்கப்படுகின்றன.
படைப்பாளிக்கு சுதந்திரமில்லாமல், அரசியல் சமரசங்களுடன், வியாபார அழுத்தங்களுடன் விழிபிதுங்கி நிற்கிறது கலைத்துறை. சில சமயங்களில் அந்த படைப்பை விட, அதை தயாரித்த நிறுவனம், அதில் நடிக்கும் நடிகர் என்று யாராவது ஒருவருக்கு எதிராகவும் எதிர்ப்பு வெடிக்கிறது. கலையை கலையாக, சுதந்திரமாக தயாரிக்கவும், ரசிக்கவும் நாம் முற்படும் போது தான் கலை வளரும்.
நடந்த சில சம்பவங்களை, வரலாற்றை வேறு விதமாக கற்பனை செய்து எடுக்கப்படும் படைப்புகள், தமிழ் கலைத்துறையில் இல்லவே இல்லை என்று சொல்லலாம். சிறு விதிவிலக்காக, நினைவுக்கு வருவது கமல்ஹாசனின் ஹேராம் திரைப்படம். அதிலும் கூட வரலாற்றை மாற்றாமல், அந்த வரலாற்றின் போக்கிலேயே, காந்தியை கொல்ல இன்னொரு கொலையாளியும் காத்திருந்தான்; காலப்போக்கில் மனம் மாறினான் என்பதாக காட்டி இருப்பர்.
மாற்று வரலாற்று திரைப்படங்களாக, ஆங்கிலத்தில் வந்த படங்களில் பிரபலமானது, இன்குளோரிசயஸ் பாஸ்டர்ட்ஸ்! யூதர்களை ஹிட்லர் படுகொலை செய்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், யூத இனத்தவர் சிலர், அமெரிக்க ராணுவத்தில் இணைந்து, அதே ஜெர்மனியில் விமானத்தில் இறங்கி, நாஜிக்களை கொடூரமாக கொல்வதாக வந்த படம் இது. அடிமை முறையை ஆதரிக்கும் படம். சாதாரண நாஜிக்களை மட்டும் அல்ல; இறுதியில், ஹிட்லரையே இந்த யூதர்கள் கொல்வதாக கதை போகும். யூதர்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே சித்தரிக்கப்பட்ட நிலையில், திருப்பி அடித்தவர்களாக, ஹிட்லரை கொன்றவர்களாக ஒரு மாற்று வரலாற்று கற்பனையை இந்த படம் காட்டியது.
இதுபோல மாற்று வரலாற்றில், கற்பனையை கலந்து படங்கள் வந்துள்ளன. கருப்பர் அடிமை முறையை நீக்கிய ஆபிரகாம் லிங்கனை, பேய்களுடன் சண்டையிடுவதாக அமைந்த கற்பனை படம், ஆப்ரஹாம் லிங்கன்: வேம்பைர் ஹன்ட்டர்! அமெரிக்காவில் கருப்பர் – – வெள்ளையர் இனவெறி, இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் பிரச்னை. இந்நிலையிலும், பல திரைப்படங்கள், அரசியல் சரிநிலைக்கு அஞ்சாமல் திரைப்படமாகவும், சீரியல்களாகவும் வெளிவந்தபடி தான் இருக்கின்றன.
கன்பெடரேட் அமைப்பு, அமெரிக்க உள்நாட்டு போரில் வென்று, அடிமை முறையை தொடர்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற கற்பனையில் வந்த படம், தி கன்பெடரேட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா! அந்த படம் முழுதும் அடிமை முறையை ஆதரித்து காட்சிகள் இருக்கும். அப்படியும் இந்த படம் தயாரிக்கப்படுவதும், வெளியிடப்படுவதும் தடைபடவில்லை.
ஒயிட் மேன்ஸ் பர்டன் என்ற திரைப்படத்தில், அமெரிக்காவில் கருப்பினத்தவர், வெள்ளை இனத்தவரை விட பொருளாதார ரீதியிலும், சமூக நிலையிலும் மேலானவர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் அமைந்தது. இதெல்லாம் கூட பழைய வரலாறு. நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிற ஜார்ஜ் புஷ், கொலை செய்யப்பட்டு அதன் விளைவாக என்னென்ன நேரிடுகிறது என்று கற்பனை செய்து பார்க்கிற திரைப்படம், டெத் ஆப் ஏ பிரெசிடென்ட்!
படைப்புக்கு தேவை சுதந்திரம்
தமிழிலும் வரலாற்று தருணங்களை, வேறு விதமாக கற்பனை செய்து படைப்புகள் எடுக்கப்பட வேண்டும். காமராஜர் தேர்தலில் வென்றிருந்தால், எம்.ஜி.ஆர்., 90 வயது வரை இருந்திருந்தால், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கூட, கற்பனை செய்து படைப்புகள் அமைவதில் தவறில்லை; அப்படிப்பட்ட ஒரு சுதந்திரமான சூழ்நிலை வரவேற்கப்பட வேண்டும். இதுபோன்ற படைப்புகளை கண்டு பதற்றமடைவது வீண்.
ஒரு வரலாற்று சம்பவம், பல விதங்களில் பார்க்கப்படுவது, தவிர்க்க இயலாதது. நிஜமும் கற்பனையும் கலந்து பேசுவது, மேடை பேச்சுக்கு மட்டுமல்ல, கலைப் படைப்புக்கும் தேவையான சுதந்திரம் தான்.ஒரு படைப்பு பேசும் கருத்து ஏற்க இயலாதது என்றால், அதற்கு இன்னொரு கலைப் படைப்பு தான் மாற்றாக அமையுமே தவிர, எதிர்ப்பும் போராட்டமும் தடையும் அல்ல!

related posts