மதுரை தேனி திண்டுக்கல் ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களின் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குதல், உர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
கரோனா நிவாரண உதவித்தொகை, சிறப்பு நிவாரண பொருள்கள் தொகுப்பு ஆகியன மக்களுக்கு தடையின்றி, விரைவாக சென்று சேருவதற்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியது:
நிகழாண்டில் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 11,500 கோடிக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி பயிர் கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல ரூ. 2.10 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு கரோனா நிவாரண உதவி இரண்டாம் தவணை, சிறப்பு நிவாரண பொருள்கள் ஜூன் 15-ஆம் தேதி முதல் வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
திமுக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு, ஏழை எளிய மக்களுக்கு முழுமையாக அரசின் திட்டங்களை கொண்டு மக்களுக்கு சேர்ப்பதில் தீவிரமாக இயங்கி வருகிறோம்.
மழையால் சேதமடையும் விளை பொருள்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும்.
முந்தைய ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கொடுத்து உள்ளதாக தமிழகம் முழுவதும் ஏராளமான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அது குறித்து ஆய்வு செய்து, தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டுறவுத் துறை பணிகளில் சேருவதற்காக கடந்த ஆட்சியில் நேர்காணலில் பங்கேற்றவர்களின் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என்றார்.
வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எல்.சுப்பிரமணியன், மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.