கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன.
ஐபிஎல் 2021 போட்டியின் மீதமுள்ள ஆட்டங்கள், செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பர் 19-ல் தொடங்கி அக்டோபர் 15-ல் முடிவடையும். ஐபிஎல் போட்டி முடிவடைவதற்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டி தொடங்குவதற்கும் இடையிலான கால அவகாசம் குறைவாக உள்ளது என்பது பெரிய பிரச்னையில்லை. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் முதல் பகுதியில் தகுதிச்சுற்று ஆட்டங்கள்தான் நடைபெறும். இதனால் இந்தியா போன்ற முன்னணி அணிகளுக்குப் போதுமான இடைவெளி கிடைக்கும் என்று கூறியுள்ளார்.