பிர்மிங்ஹமில் இன்று தொடங்கிய நியூசிலாந்து எதிரான 2-வது டெஸ்டில் விளையாடும் ஜேம்ஸ் ஆண்டர்சன், தனது 162-வது டெஸ்டை விளையாடுகிறார். இதன்மூலம் அதிக டெஸ்டுகளில் விளையாடிய குக்கின் சாதனையை (161 டெஸ்டுகள்) முறியடித்துள்ளார்.
2003-ல் லார்ட்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார் ஆண்டர்சன். இதுவரை 616 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 2008-ல் ஸ்டூவர்ட் பிராடுடன் இணைந்து நியூசிலாந்தில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி வெற்றி பெற பெரிதும் உதவினார் ஆண்டர்சன். அந்த டெஸ்டிலிருந்து ஆண்டர்சன் – பிராட் கூட்டணி, டெஸ்டில் முத்திரை பதிக்க ஆரம்பித்தது. முதல் 20 டெஸ்டுகளில் சுமாராக பந்துவீசி வந்த ஆண்டர்சன், பிராடுடன் இணைந்த பிறகு வெற்றிகரமான பந்துவீச்சாளராக மாறினார். 2009-2013 வரை மூன்று ஆஷஸ் வெற்றிகளையும் 2012-13-ல் இந்தியாவில் டெஸ்ட் தொடரையும் வெல்ல இங்கிலாந்து அணிக்கு முக்கியப் பங்களிப்பு அளித்தார்.
30 வயதுக்கு முன்பு 71 டெஸ்டுகளில் 268 விக்கெட்டுகளை எடுத்த ஆண்டர்சன், 30 வயதுக்குப் பிறகு 90 டெஸ்டுகளில் 348 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். வயது அதிகமாக ஆக, திறமையை அதிகமாக வெளிப்படுத்தி, ஏராளமான விக்கெட்டுகளைக் குவித்து வருகிறார்.
அடுத்த மாதம் 39 வயதை எட்டுகிறார் ஆண்டர்சன். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என இரு பெரிய அணிகளுக்கு எதிராக தலா 5 டெஸ்டுகளில் விளையாடவுள்ளார் ஆண்டர்சன். இன்று போல பல சாதனைகளை அவர் நிகழ்த்த வேண்டும் என்பதே கிரிக்கெட் உலகின் விருப்பம்.