Home விளையாட்டு வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் கிஷோர் தேர்வு!

வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் கிஷோர் தேர்வு!

by admin
இந்திய அணி அடுத்த மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதால், இலங்கைக்கு எதிரான தொடர்களுக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்ரவத்தி சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்திய அணியில் 3-வது முறையாக வாய்ப்பு பெற்றுள்ளார்.
இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கான வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர்களாக இஷான் போரெல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங் ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள்.
24 வயது சாய் கிஷோர், சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி போட்டியில் மிகச்சிறப்பாகப் பந்துவீசினார். இதனால் தமிழக அணி கோப்பையை வெல்ல பெரிதும் உதவினார்.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர், சையத் முஷ்டாக் அலி போட்டியில் மிகக்குறைவான ரன்கள் கொடுத்து அசத்தினார். விளையாடிய எட்டு ஆட்டங்களிலும் அவருடைய பந்துவீச்சு தமிழக அணிக்குப் பெரிதும் உதவியது. முக்கியமாக பவர்பிளே ஓவர்களில் இவருடைய பந்துவீச்சு எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்து அதிக ரன்களை எடுக்க முடியாத சூழலை உருவாக்கியது. சையத் முஷ்டாக் அலி இறுதிச்சுற்றில் விக்கெட்டுகள் எடுக்காமல் போனாலும் 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 8 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகள் எடுத்தார். எகானமி – 4.82. நாக் அவுட் ஆட்டங்களில் சாய் கிஷோரின் பந்துகளில் எதிரணி வீரர்கள் ரன்கள் எடுக்க முடியாமல் திணறினார்கள்.
ஐபிஎல் போட்டியில் ஒரு வாய்ப்பும் கிடைக்காததால் சாய் கிஷோரின் திறமை இன்னும் பலருக்கும் தெரியாமல் உள்ளது. 2019 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு சாய் கிஷோரைத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த வருட சையத் முஷ்டாக் அலி போட்டியில் சாய் கிஷோர் தான் அதிக விக்கெட்டுகள் எடுத்திருந்தார். 12 ஆட்டங்களில் 20 விக்கெட்டுகள். எகானமி – 4.63. எனினும் கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சாய் கிஷோருக்கு ஒரு வாய்ப்பையும் தோனி வழங்கவில்லை. இத்தனைக்கும் சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர்கள் மோசமாகப் பந்துவீசியும் ஒரு வாய்ப்பும் சாய் கிஷோருக்குக் கிடைக்கவில்லை.
தொடர்ந்து இரு வருடங்களாகத் தனது திறமையை நிரூபித்து வரும் சாய் கிஷோரைப் பற்றி இந்தியத் தேர்வுக்குழு அறிந்துள்ளதால் தான் தற்போது வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகத் தேர்வாகியுள்ளார். எந்த ஒரு சுழற்பந்துவீச்சாளருக்காவது காயம் ஏற்பட்டு அணியிலிருந்து விலகினால் சாய் கிஷோர் இந்திய அணியில் சேர்க்கப்படுவார். இனிமேலாவது சாய் கிஷோரின் திறமைகளை உலகம் அறியட்டும்.

related posts