Home Uncategorized கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி: அரசாணை வெளியீடு

கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி: அரசாணை வெளியீடு

by admin
கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வைப்பீடு செய்யப்பட்டு, அந்தக் குழந்தை 18 வயதை நிறைவடையும்போது அந்தத் தொகை வட்டியோடு அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 29-ம் தேதி அறிவித்தார்.
இது தவிர அந்தக் குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை, பட்டப் படிப்பு வரை கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசு ஏற்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளும் அறிவிப்பில் இடம்பெற்றிருந்தன.
இந்த அறிவிப்பு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
அரசாணை விவரம்:
கரோனா தொற்றால் பெற்றோர்களை, தாய் அல்லது தந்தையை இழந்து  பெற்றோர் இல்லாமல் வாடும் குழந்தைகளுக்கு முதல்வர் அறிவித்துள்ள நிவாரணத் திட்டத்தை செயல்படுத்த நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு கடந்த 7-ம் தேதி வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது.
பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் பெயரில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 5 லட்சம் வைப்பீடு தொகையாக வைக்கப்படும். அந்தக் குழந்தை 18 வயதை நிறைவு செய்யும்போது அந்தத் தொகை வட்டியுடன் அளிக்கப்படவுள்ளது.
ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து தற்போது கரோனாவால் மற்றொருவரையும் இழந்த குழந்தை பெயரிலும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வைப்பீடு தொகையாக வைக்கப்பட்டு, 18 வயதை நிறைவு செய்யும்போது வட்டியுடன் அந்தத் தொகை அளிக்கப்படவுள்ளது.
பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் காப்பகங்கள், விடுதிகளில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளன.
பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்பட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கிறது.
கரோனாவால் பெற்றோர்களில் யாரேனும் ஒருவரை இழந்த குழந்தையின் தாய் அல்லது தந்தையிடம் குழந்தையின் பெயரில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் அளிக்கப்படவுள்ளது.
பெற்றோர்களை இழந்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு குழந்தைகள் காப்பகம் அல்லது விடுதிகளில் அனுமதிக்கப்படாமல் உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வசிக்கும் குழந்தைக்கு பராமரிப்புச் செலவாக மாதந்தோறும் ரூ. 3,000 வழங்கப்படும். அந்தக் குழந்தை 18 வயதை நிறைவு செய்யும் வரை இந்தத் தொகை அளிக்கப்படும்.
பெற்றோர்களை இழந்த அனைத்துக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களில் யாரேனும் ஒருவரை இழந்த குழந்தையுடன் வசிக்கும் தாய் அல்லது தந்தைக்கு அனைத்து அரசுத் திட்டங்களிலும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளன.
இதுதவிர திட்டத்தை செயல்படுத்த நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளும் அரசாணையில் இணைக்கப்பட்டுள்ளன.

related posts