Home இந்தியா காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் திறந்துவைத்தார்

காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் திறந்துவைத்தார்

by admin
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அணையில் இருந்து மதகுகளை இயக்கி தண்ணீரைத் திறந்து விட்டார்.
மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி 230 நாட்களுக்கு 330 டி.எம்.சி தண்ணீர் குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு தேவைப்படும். பாசனப்பகுதிகளில் மழை பெய்தால் நீர்த் தேவை குறையும். மேட்டூர் அணை திறக்கப்பட்ட 88 ஆண்டு கால வரலாற்றில் குறித்த நாளான ஜூன் 12 ஆம் தேதி 17ஆண்டுகள் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கடைசியாக 2020 இல் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டில் 18 ஆவது ஆண்டாக குறிப்பிட்ட காலத்தில் ஜூன் 12 இல் தண்ணீர் திறக்கப்படுகிறது.
அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜூன் 12-க்கு முன்பாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
ஜூன் 12-க்குப் பிறகு 60 ஆண்டுகள் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த 2011 இல் அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 12-க்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்டது.
அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் நடப்பு நீர்பாசன ஆண்டில் மேட்டூர் அணையின் வரலாற்றில் 88 ஆவது ஆண்டாக காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
88 ஆவது ஆண்டாக நீர் திறப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காலை 11.25 மணிக்கு அணையின் வலதுகரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை மின்விசையால் உயர்த்தி பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் மலர் தூவி வரவேற்றார். முதற்கட்டமாக 3,000 கன அடி நீர் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
குறிப்பிட்ட நாளான ஜூன் 12 இல் குறுவை சாகுபடிக்கு நடப்பாண்டில் தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குறுவை பாசனம் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் 4,91,600 ஏக்கர் நிலமும், கடலூர் மாவட்டத்தில் 30,800 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும்.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போது அணை மின்நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மின்சாரமும், 7 கதவணைகள் மூலம் 300 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் அணை மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 100 மெகாவாட் மின்சாரமும், 7 கதவணைகள் மூலம் 70 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து சனிக்கிழமை காலை 3 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் திறக்கப்பட்டது. சனிக்கிழமை இரவு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படும். இந்த நீர் மூன்று நாளில் கல்லணை சென்றடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டாவது முதல்வர்…:
மேட்டூர் அணை நீர் திறப்பு நிகழ்வில் பங்கேற்கும் இரண்டாவது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவார். முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மேட்டூர் அணை நீர் திறப்பு நிகழ்வில் பங்கேற்ற முதல் தமிழக முதல்வர் ஆவார்.
நிகழ்ச்சியில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, ள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு கொறடா கோ.வி.செழியன், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், நீர் வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறை  திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, அவைத்தலைவர் பா.கோபால், மத்திய மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ. ஆர்.ராஜேந்திரன், பாமக எம்எல்ஏ எஸ்.சதாசிவம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், எம்.பி-க்கள் எஸ்‌.ஆர்.பார்த்திபன், டாக்டர் செ.செந்தில்குமார், மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளர் சீனிவாச பெருமாள், மேட்டூர் நகர செயலாளர் காசிவிஸ்வநாதன், நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், சேலம் மேற்கு மாவட்ட துணை செயலாளர் கொடியரசி பாலு, விமல், தெத்திகிரிபட்டி சீனிவாசன், மேட்டூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் அழகரசன், ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

related posts