எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பிலான ஜனரஞ்சகமற்ற தீர்மானத்தின் பொறுப்பை, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீது சுமத்தும் முயற்சியை கண்டிப்பதாக அரசாங்கத்தின் 8 பங்காளிக் கட்சிகள் கூட்டாக தெரிவித்துள்ளன.
பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகளான எங்கள் மக்கள் சக்தி கட்சி சார்பில் அத்துரலிய ரத்தன தேரரும், தேசிய சுதந்திர முன்னணியின் அமைச்சர் விமல் வீரவன்சவும், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் லங்கா சம சமாஜ கட்சியின் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவும் தேசிய காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாவும் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜி.வீரசிங்கவும் எக்சத் மஹஜன கட்சியின் டிரான் அலஸூம் இலங்கை மக்கள் கட்சி சார்பில் அசங்க நவரத்னவும் கூட்டாக கையொப்பமிட்டு அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதம செயலாளரும் நியமன பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம், எரிபொருள் விலையேற்றம் தொடர்பிலான ஜனரஞ்சகமற்ற தீர்மானத்தின் பொறுப்பை அமைச்சர் உதய கம்மன்பில மீது சுமத்தியதால் மக்கள் மத்தியில் அரசாங்கம் அநாவசிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
உலக நாடுகளைப் போன்றே, இலங்கையும் COVID பெருந்தொற்றை எதிர்கொண்டுள்ள நிலையில், மக்கள் வருமானத்தை இழந்துள்ளதாக குறித்த கட்சிகள் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றம் தொடர்பான தீர்மானம் ஜனாதிபதி தலைமையில், பிரதமரும் கலந்துகொண்ட வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்பதை குறித்த 8 அரசியல் கட்சிகளும் தெளிவுபடுத்தியுள்ளன.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்துவதன் மூலம் பொதுஜன பெரமுனவின் பிரதம செயலாளர் அரசாங்கத்திற்குள், குழு ரீதியிலான பிளவை ஏற்படுத்துவதற்கு முயல்கின்றாரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் குறித்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய குழுக்கள் சார்ந்த மற்றும் முதிர்ச்சி பெறாத செயற்பாடுகளால் இறுதியில் அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை சீர்குலைவதற்கு வழிவகுக்கும் என அவர்களது கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குழு ரீதியிலான பிளவினை ஏற்படுத்தும் முயற்சியை உடனடியாக தோற்கடிக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.