உலகின் மிகப் பெரிய குடும்பத்தின் தலைவர் என நம்பப்படும், இந்தியாவின் மிசோராம் மாநிலத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் காலமானார்.
மிசோராம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சியோனா சானா, 76. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தவர், நேற்று உயிரிழந்தார். இவருக்கு 38 மனைவிகள், 89 பிள்ளைகள், 36 பேரப்பிள்ளைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், ‘சானாவின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைச் சரியாகக் கணிப்பது கடினம்’ என, அம்மாநில செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். சானாவின் மரணத்திற்கு, மிசோராம் மாநில முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய குடும்பத்தின் தலைவர் என நம்பப்படும் சானாவின் வியக்கத்தக்க வாழ்க்கை, பலரையும் ஈர்த்துள்ளது. அவரின் குடும்பத்தினர், 100 அறைகள் கொண்ட, 4 மாடி வீட்டில் ஒன்றாக வசிக்கின்றனர். அந்த வீட்டைக் காண, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மிசோரம் வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது.
சானாவின் குடும்பத்தினர், சானா பாவ்ல் (Chana Pawl) என்ற கிறிஸ்துவப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அந்தப் பிரிவைச் சேர்ந்த ஆண்கள், பல பெண்களைத் திருமணம் செய்துகொள்ள அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.