Home இலங்கை துப்பாக்கிச் சூடு தனிப்பட்ட பிரச்சினையே – வியாழேந்திரன்

துப்பாக்கிச் சூடு தனிப்பட்ட பிரச்சினையே – வியாழேந்திரன்

by Jey

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக நேற்று (21) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 35 வயதான ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று (22) நடைபெற்றன.

மட்டக்களப்பு – ஊறணி மன்றேசா வீதியிலுள்ள இராஜாங்க அமைச்சர் எஸ். வியோழேந்திரனின் இல்லத்திற்கு முன்பாகவே இந்தப் துப்பாக்கிப் பிரயோகம் நேற்று மாலை 5.10 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

சம்பவ இடத்திற்கு இன்று காலை வருகை தந்த மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.ரிஷ்வான் விசாரணைகளை மேற்கொண்டார்.

இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மட்டக்களப்பு – ஊறணி மன்ரேசா வீதியிலுள்ள இல்லத்திற்கு முன்பாக பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 35 வயதான மகாலிங்கம் பாலசுந்தரம் என்ற லொறி சாரதியே உயிரிழந்தார்.

குறித்த லொறி சாரதி, முச்சக்கரவண்டியில் நேற்று மாலை 5.10 மணியளவில் இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு அருகாமையில் பயணித்தபோதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவரின் உறவினர்களும் ஊராரும் இராஜாங்க அமைச்சரின் இல்லத்திற்கு முன்பாக, நேற்றிரவு ஒன்றுகூடி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

பின்னர் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரப்படையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதை அடுத்து எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டியில் உயிரிழந்தவர் மீதான பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் லொறி சாரத்திக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் பொலிஸாரினால் எந்தவகையிலும் அனுமதிக்க முடியாதவொன்று என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

related posts