‘நாட்டின் பெயரை இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என மாற்ற வேண்டும்’ என, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வலியுறுத்தியுள்ளார்.
சர்ச்சைக் கருத்துகளைப் பதிவிட்டதற்காக நடிகை கங்கனாவின் கணக்கை, டுவிட்டர் நிறுவனம் சமீபத்தில் நீக்கியது. இதையடுத்து அவர், ‘கூ’ என்ற சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளார். அதிலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நேற்று அவர் பதிவிட்டுள்ளதாவது:
இந்தியா என்ற பெயர் அடிமை பெயராக உள்ளது. எனவே அதை மாற்றி, நமது நாட்டின் பழைய பெயரான, பாரதம் என்பதையே வைக்க வேண்டும். நகர்ப்புற வளர்ச்சியில் நாம் உயர்ந்தாலும், மேற்கத்திய உலகின் மலிவான நகலாக இல்லாமல், வேதங்கள், பகவத் கீதை மற்றும் யோகாவில் ஆழமாக வேரூன்றி இருந்தால் உலகின் மிகப்பெரிய நாடாக நாம் வெளிப்படுவோம். எனவே இந்த அடிமைப் பெயரான இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்று மாற்ற முடியுமா?
இந்தியா என்ற அடிமைப் பெயரை, பிரிட்டிஷார் நமக்குக் கொடுத்தனர். அதாவது சிந்து நதியின் கிழக்குப் பகுதியைக் குறிக்கும் வகையில் இது தரப்பட்டது. இப்படியெல்லாமா பெயரை வைப்பார்கள்? உங்கள் குழந்தைக்கு சின்ன மூக்கு, இரண்டாவதாகப் பிறந்தவன் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்க முடியுமா? பிஎச் (பவ்), ரா (ராக்), தா (தாள்) என்ற பெயர்கள் இணைந்ததே பாரதம். நாம் அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே நாம் கலாச்சாரம் மிகுந்தவர்களாகவும், நாகரீகம் மிக்கவர்களாகவும் இருந்தோம். எனவே பழைய பெயரான பாரத் என்று மாற்றி, இழந்த பெருமையை மீட்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.