ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான திட்டங்கள் தொடர்பாக நாளை (ஜூன் 24) அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்து காஷ்மீரில் 48 மணி நேர உஷார்நிலை பிரகடனப்படுத்தபட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு தேர்தல் நடத்துவது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் காஷ்மீரின், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பிரதான 6 கட்சிகள் இணைந்து குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி என்ற குப்கர் கூட்டணி தலைவர்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து, சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் குப்கர் கூட்டணி வலியுறுத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், நாளை (ஜூன் 24) பிரதமர் தலைமையிலான இந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் குப்கர் கூட்டணியுடன் 14 கட்சி தலைவர்கள் பங்கேற்பர் என தெரிகிறது.
நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடக்க உள்ள நிலையில் காஷ்மீரில் பதற்றத்தை தவிர்க்க ஜம்மு காஷ்மீர் முழுவதும், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி ஆகிய பகுதிகளில் 48 மணி நேர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே இன்று டில்லி வந்துள்ள குப்கர் கூ்டடணியில் அங்கம் வகிக்கும் மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி பிரதமர் மோடியை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.