சஸ்கட்ச்சுவானிலும் வதிவிடப் பாடசாலையொன்றில் நூற்றுக் கணக்கான புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை பழங்குடியின மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சஸ்கட்ச்சுவானின் கவுஸிஸ் பகுதியில் இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான அடையாளப்படுத்தப்படாத புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
ராடார்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன்களின் மூலம் இந்த புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
மாரிவால் இந்திய வதிவிடப் பாடசாலை பூமியில் இவ்வாறு புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பழங்குடியினத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் மிகவும் கொடூரமானதும், பேராதிர்ச்சி ஏற்படுத்தும் வகையிலானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான அடையாளப்படுத்தப்படாத புதைகுழிகள் இவையாகத்தான் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
1899ம் ஆண்டில் இந்த வதிவிடப்பாடசாலை கத்தோலிக்க மிஷனரிகளினால் நிர்மானிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வதிவிடப்பாடசாலை பூமியில் அடையாளப்படுத்தப்படாது புதைக்கப்பட்ட அனைவரினதும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாக மாகாண முதல்வர் ஸ்கொட் மோய் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடியானதும் துயர் நிறைந்ததுமான சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பழங்குடியின சமூகத்தினுக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
ஏற்கனவே காம்ப்லூப்ஸ் வதிவிடப்பாடசாலையில் 215 சிறார்கள் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த சஸ்கட்;ச்வான் வதிவிடப்பாடசாலை விவகாரம் பூதாகாரமாகியுள்ளது.
பழங்குடியின மக்கள் திட்டமிட்ட அடிப்படையில் இனச் சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப்பட்டதாகவே குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.