பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஓய்வூதியம் வழங்கி அவர்களை ஊக்குவிப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அந்நாட்டையே பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்’ என, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் இந்தியா புகார் தெரிவித்துள்ளது.
ஐ.நா., மனித உரிமை ஆணையரின் வருடாந்திர அறிக்கை மீது, மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் பிரதிநிதி காலில் ஹாஷ்மி எழுப்ப முயன்றார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, இந்தியப் பிரதிநிதி பவன் குமார் பாதே பேசியதாவது:
பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் அன்றாட நிகழ்வாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறுபான்மையின சிறுமிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனர். பத்திரிகையாளர்கள் கடத்தப்படும், கொல்லப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. குற்றவாளிகள் மீது நவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
ஐ.நா.,வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்து வருகிறது. அவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியமும் வழங்குகிறது. பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அந்நாட்டை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். பயங்கரவாதத்தால் ஏற்படும் துன்பம், மனித உரிமை மீறலாகும். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தான் தனது மனித உரிமை மீறல்களில் இருந்து ஆணையத்தின் கவனத்தை திசை திருப்ப, காஷ்மீர் விவகாரத்தை எழுப்புகிறது.இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்.