Home இந்தியா பிளஸ் 2 முடிவுகளை அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிளஸ் 2 முடிவுகளை அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

by Jey

ஜூலை 31க்குள் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என அனைத்து மாநிலகல்வி வாரியங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின், பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தது. பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்களை கணக்கிடும் முறை குறித்து ஆய்வு செய்ய, 13 பேர் அடங்கிய குழுவை, சி.பி.எஸ்.இ., அமைத்தது.இந்த குழு உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் அறிக்கை தாக்கல் செய்தது.

அதில் கூறப்பட்டிருந்ததாவது: பிளஸ் 2 மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, பிளஸ் 1 இறுதி தேர்வு மற்றும் பிளஸ் 2வில் யூனிட் தேர்வு, பருவ தேர்வு, மாதிரி பொதுத் தேர்வுகளில், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், 30:30:40 என்ற விகிதாச்சார அடிப்படையில் கணக்கிடப்பட்டு, ‘வெயிட்டேஜ்’ முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.எஸ்.இ., தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் விபரம்: ‘பிளஸ் 2 மாணவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும் மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் திருப்தி இல்லாதவர்களுக்கு, ஆக., 15 – செப்., 15க்குள், ‘இம்ப்ரூவ்மென்ட்’ எனப்படும், மதிப்பெண் அதிகரிப்பதற்கான தேர்வு நடத்தப்படும்’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, மதிப்பெண்களை வழங்கும் முறை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியமும், சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலும், தனித்தனியே பிரமாண பத்திரம் தாக்கல் செய்தன.

பிளஸ் 2 தேர்வு தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ வாரியங்கள் இரண்டு வார கால இடைவெளியில் மதிப்பெண் கணக்கீட்டு முறையை சமர்ப்பித்தது போல், பிற மாநில கல்வி வாரியங்களும் மதிப்பீட்டு முறையை விரைவில் இறுதி செய்ய வேண்டும். பிளஸ் 2 தேர்வு தொடர்பாக அகமதீப்பீட்டு திட்டங்களை தயார் செய்து, அதன் அடிப்படையில் ஜூலை 31க்குள் முடிவுகளை அறிவிக்க வேண்டும். அகமதிப்பீட்டு முறையை, இன்றில் இருந்து அடுத்த 10 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

இதன் இடையே, பிளஸ் 2 தேர்வு நடத்த அனுமதி கேட்டு ஆந்திரா சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தவழக்கு கன்வில்கர், தினேஷ் மகேஷ்வரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மற்ற கல்வி வாரியங்கள் தேர்வுகளை ரத்து செய்த நிலையில், அதில் இருந்து தாங்கள் மாறுபட்டவர்கள் என காட்ட ஆந்திர அரசு முயற்சி செய்வது ஏன்?தேர்வு நடத்தி, அதனால், பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்தால் கூட அவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடுவோம். கோவிட் வைரஸ் உருமாறி வரும் நிலையில், தேர்வுகளை நடத்த வேண்டியதன் அவசியம் என்ன என கேள்வி எழுப்பினர்.

related posts