சர்வதேச ரீதியில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 18 கோடியை கடந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் சர்வதேச ரீதியில் 4 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய மொத்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 18 கோடியே 3 இலட்சத்து 70 ஆயிரத்தை கடந்துள்ளது. பிரேஸிலில் தொடர்ந்தும் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
நேற்றைய தினத்தில் மாத்திரம் அந்நாட்டில் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 139 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், 2 ஆயிரத்து 343 மரணங்களும் பதிவாகியுள்ளன. இந்தியாவில் 54 ஆயிரத்து 319 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், 968 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது பரவி வரும் டெல்டா வகை வைரஸ் தொற்று பாரிய அச்சுறுத்தலாக உள்ளதென அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக வெள்ளை மாளிகை தலைமை மருத்துவ ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவலை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கைக்கு டெல்டா வகை வைரஸ் சவாலாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.