தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‛நான் அண்ணாதுரையின் அரசியல் வாரிசு, கருணாநிதியின் கொள்கை வாரிசு,’ என பேசியுள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் நடந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ‛கோவிட் பரவலை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது’ என குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 1920-ம் ஆண்டு முதல் 1937-ம் ஆண்டு வரை 17 ஆண்டுகள் நீதிக்கட்சி ஆட்சி செய்தது. சமூக நீதியை நீரூற்றி வளர்த்தது நீதிக்கட்சி. சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியமைத்து நூறாண்டுகள் கடந்துவிட்டன. இந்த சமயத்தில் திமுக ஆட்சிக்கு வந்திருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். எங்களின் ஆட்சி நீதிக்கட்சியின் தொடர்ச்சி என்பதை பெருமையுடன் கூறுகிறேன்.
நீதிக்கட்சியின் தொடர்ச்சி அண்ணாதுரை. அண்ணாதுரையின் தொடர்ச்சி கருணாநிதி. கருணாநிதியின் தொடர்ச்சி நானும் இந்த அரசும். தமிழினத்தை நம்மால் தான் வளர்ச்சி பெற வைக்கமுடியும் என மக்கள் நம்மை ஆட்சியில் அமரவைத்துள்ளார்கள். என்னுடைய தொலைநோக்குப் பார்வையைத்தான் கவர்னர் தன் உரையில் கோடிட்டுக் காட்டியுள்ளார். கவர்னர் உரை டிரைலர் தான். பொறுத்தார் பூமியாழ்வார் என்பது போல நாங்கள் பத்தாண்டுகள் பொறுத்திருந்து ஆட்சிக்கு வந்துள்ளோம், கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஏனெனில், நான் அண்ணாதுரையின் அரசியல் வாரிசு, கருணாநிதியின் கொள்கை வாரிசு. அவர்களின் பாதையில் நான் செல்வேன்.
தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற சூழலில் தான் ஆட்சிக்கு வந்தோம். தற்போது இல்லை இல்லை என்ற சூழலே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம். பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் கடந்த 2 நாட்களாக சட்டசபையில் பல்வேறு பிரச்னைகள் குறித்து உரையாற்றினார்கள். அதனை அரசுக்கு அவர்கள் கூறிய ஆலோசனைகளாகவே எடுத்துக்கொள்கிறேன். அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்கமுடியாத யானை. யானைக்கு 4 கால்கள் தான் பலம். அதுபோல திமுக.,வுக்கு சமூகநீதி, மொழிபற்று, சுயமரியாதை, மாநில உரிமை போன்ற 4 கொள்கைகள் தான் பலம். இந்த 4 கொள்கைகளை அடிப்படையாக வைத்தே திமுக செயல்படும்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்பது போல, கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தை பழனிசாமி மறந்தேவிட்டார். தமிழகத்தில் கோவிட் தொற்று பரவல் அதிகரிக்க, ஏப்ரல் மாதம் வரை ஆட்சி நடத்திய பழனிசாமியே காரணம். கோவிட் தொற்று அதிகரிக்கத் துவங்கிய போதே, அதனைக் கட்டுப்படுத்த அப்போதைய அதிமுக அரசு தவறிவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்த போதே, தமிழகத்தில் கோவிட் பரவல் உச்சத்தில் இருந்தது. அதன்பிறகு எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே கோவிட் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இதனையடுத்து சட்டசபை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.