Home இலங்கை மற்றுமொரு கப்பலில் தீ பரவல்

மற்றுமொரு கப்பலில் தீ பரவல்

by Jey

கொழும்பு துறைமுகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த MSC Messina என்ற கொள்கலன் கப்பலில் தீ பரவியுள்ளது.

தென் கடற்பரப்பின் மகா ராவணா வெளிச்சவீட்டிலிருந்து கிழக்கே 480 கடல் மைல் தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது கப்பலில் தீ பரவியுள்ளதாக கடற்படை தெரிவித்தது.

1995 ஆம் ஆண்டு சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டு லைபீரிய கொடியுடன் பயணித்துக் கொண்டிருந்த MSC Messina கப்பல், தென் கொரியாவின் டேர்பன் துறைமுகத்தில் இருந்து கடந்த 22 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

பின்னர் இந்தக் கப்பல் கடந்த 23 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

கப்பலின் எஞ்சின் அறையில் நேற்று ஏற்பட்ட, தீ தொடர்பில் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்தது.

தென் கடற்பரப்பின் மகா ராவணா வெளிச்சவீட்டிலிருந்து கிழக்கே 480 கடல் மைல் தூரத்தில் தற்போது கப்பல் இருப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இந்திய கரையோர பாதுகாப்புப் படையினர், கப்பலை அண்மித்துள்ளதுடன் அவர்கள் ட்விட்டரில் இரண்டு நிழற்படங்களை வெளியிட்டுள்ளனர்.

அந்தமான், நிக்கோபார் தீவுகளான போட் பிலெயாரில் இருந்து 425 கடல் மைல் தொலைவில் கப்பல் செயலிழந்துள்ளதாக இந்திய கரையோர பாதுகாப்பு படை தெரிவித்தது.

கப்பலில் 28 பணியாளர்கள் உள்ளதுடன், அவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கடந்த வருடம் செப்டெம்பர் மூன்றாம் திகதி குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு எரிபொருள் ஏற்றிச்சென்ற MT New Diamond கப்பல் சங்கமன்கண்டிக்கு அண்மித்த கடற்பகுதியில் தீப்பற்றியது.

இதனால் எமது கடற்பரப்பிற்கு பாரிய சேதம் ஏற்பட்டது.

கடந்த மாதம் 20 திகதி கொழும்பு வௌிப்புற துறைமுகத்தில் X-Press Pearl கப்பல் தீப்பற்றியது.

தீயினால் அழிவடைந்த கப்பலினால் எமது நாட்டில் சமுத்திரத்திற்கு பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச பிரகடனங்களுக்கு அமைய இடர்நிலைமைகளின் போது இலங்கை தலையிட வேண்டிய எல்லைக்குள்ளேயே இன்று மற்றுமொரு கப்பல் தீப்பற்ற ஆரம்பித்துள்ளது.

related posts