நாமல் ராஜபக்சவை முன்னிலைப்படுத்தி பரப்புரை முன்னெடுத்து, அவரை எதிர்காலத்தில் ஜனாதிபதியாக்கும் நோக்கில்கூட தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் 16பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே கூட்டணியின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார்
.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எமது நல்லாட்சியின்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதற்கான நடவடிக்கை நல்ல நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தற்போது திட்டமிட்ட அடிப்படையில் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இரு நாட்களுக்கு முன்னர் அமைச்சர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அரசு தொடர்பில் நல்லதொரு விம்பத்தை அதன்மூலம் கட்டியெழுப்பினார். இந்நிலையில் 16 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே, நாமல் ராஜபக்சவை முன்னிலைப்படுத்தி அவரை எதிர்காலத்தில் ஜனாதிபதியாக்குவதற்காக நகர்வாகக்கூட இது இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.
தமிழ்மக்கள்மீதுள்ள அக்கறையால் இவர்களை விடுவித்திருந்தால், ஏனையோரையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால் அதனை நிச்சயம் நாம் வரவேற்போம். ஆதரவு வழங்குவோம். ” – என்றார்.