நடப்பு ஆண்டு நீட் தேர்வு தமிழகத்தில் நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது” என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தமிழக மாணவர்களுக்கு திமுக வாக்குறுதி அளித்தது. சட்டசபை கூட்டத்தொடரில், இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா? இல்லையா? என கேள்வி எழுப்பினேன். நீட் இருப்பின் அதற்கு மாணவர்கள் தயார் ஆக வேண்டுமா? வேண்டாமா ? என கேட்ட போது முதல்வர் நேரடியாக பதில் அளிக்கவில்லை.
தற்போதைய அரசின் முடிவால், நடப்பு ஆண்டு நீட் தேர்வு தமிழகத்தில் நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? என மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, இந்த ஆண்டு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் விலக்கு பெற்றே தீருவோம் என்று வாக்குறுதி தந்த இந்த அரசு நியமித்து உள்ள நீதிபதி ஏகே ராஜன் தலைமையிலான கமிஷன் பரிந்துரைகள் வருவதற்கு முன்பு தமிழக மாணவர்கள் நீட்தேர்வில் பங்கேற்பதா வேண்டாமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.