இராமர் பாலம் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அது உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற வேண்டும் எனவும் இந்தியாவின் மத்திய கலாசார மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல் தெரிவித்துள்ளார்.
Times of India நாளிதழுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் இதனைக் கூறியுள்ளார்.
இராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருவதாகவும் தனிப்பட்ட முறையில் தனக்கும் அதில் விருப்பம் இருப்பதாகவும் இந்தியாவின் மத்திய கலாசார மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல் கூறியுள்ளார்.
இராமர் பாலம் தொடர்பாக மேலும் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் மன்னார் தீவுகளுக்கு இடையே உள்ள ஆழமற்ற திட்டு போன்ற பகுதியே இராமர் பாலம் என அழைக்கப்படுகிறது.
இராமர் இலங்கை வரும்போது வானரப் படைகளின் உதவியோடு கடலில் பாலம் அமைத்ததாக இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை செயற்படுத்தி இராமர் பாலம் வழியாக கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்க வேண்டும் என இந்தியாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இராமர் பாலம் சேதமடைந்து விடும் என பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தன.
இந்த நிலையிலேயே மத்திய அமைச்சர் பிரகலாத் பட்டேல் ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் இராமர் பாலத்திற்கு சட்ட ரீதியிலான பாதுகாப்பு கிடைக்கும் என்பதுடன், சேது சமுத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமற்போகும் என்பது குறிப்பிடத்தக்கது.