நேச்சர் பயோடெக்னாலஜி என்கிற பிரபல விஞ்ஞான இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை தற்போது வைரலாகி வருகிறது.
பிரெஞ்சு விஞ்ஞானிகள் ஓர் வித்தியாசமான தொழில்நுட்ப அம்சம் நிறைந்த அதிநவீன முகக்கவசம் ஒன்றை தயாரித்துள்ளனர். வழக்கமாக கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் முகக்கவசம் அணிவர். துணியால் ஆன முகக் கவசங்கள் முதல் பிளாஸ்டிக் ஷீல்டு வரை பல வகை முகக் கவசங்கள் தற்போது விற்பனையாகின்றன. முகக் கவசங்கள் உடன் வைபை, ப்ளூடூத், ஸ்மார்ட்போன் ஆகியவற்றை இணைக்கும்படியான தொழில்நுட்ப ரீதியான முகக் கவசங்கள் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் விற்பனையாகின்றன.
தற்போது பிரெஞ்சு விஞ்ஞானிகள் ஒருபடி மேலே போய் அதிநவீன நோய்களை கண்டறியும் சென்சார்கள் பொருத்திய கவசங்களை கண்டுபிடித்துள்ளனர். காற்றில் கொரோனா வைரஸ் உட்பட வேறு ஏதாவது வைரஸ் இருந்தால் அதனை இந்த முகக் கவசத்துடன் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் கண்டறிந்து உடனடியாக முகக் கவசத்தை அணிந்து இருக்கும் எஜமானருக்கு தகவல் அளிக்குமாம். இதனால் அவர்கள் அந்த இடத்தை விட்டு விரைவில் நகர்ந்து தப்பித்துக்கொள்ளலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாம் சாலையில் நடந்து செல்லும்போது சுவாசிக்கும் காற்றில் பலவித வைரஸ், பாக்டீரியாக்கள் உள்ளன. நமது நாசி துவாரத்தில் உள்ள மியூகோஸ் மற்றும் ரோமங்கள் ஆகியவை இவற்றை நுரையீரலுக்குள் நுழைவதை தடுக்கின்றன. கொரோனா வைரஸ் நுண் துகள் வேகமாகப் பரவும் என்பதால் குறிப்பிட்ட ஒரு நபர் அணியும் முகக்கவசத்தில் சென்சார் பொருத்த பிரெஞ்சு விஞ்ஞானிகள் திட்டமிட்டு இதனை உருவாக்கியுள்ளனர்.
காற்றில் மிதக்கும் வைரஸ் துகள் இந்த சென்சாரில் பட்டாலே இந்த சென்சார்கள் இந்த வைரஸின் தன்மையை கண்டறிந்து விடும். இதற்கு பேட்டரி தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நமது சருமத்தின் மீது ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஏதாவது தூசி பட்டால் உடனே அந்த இடத்தில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது அல்லவா? அது போலவே இந்த சென்சார்கள் வேலை செய்யும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.