அறிவியல் நமக்கு பல வித உதவிகளை செய்து வருகிறது. அறிவியலால் நமது வாழ்க்கை முறை மிகவும் எளிதாகி விட்டது. ஆனால், இதன் பக்கவிளைவுகளுக்கும் குறைவில்லை. அனுகூலங்கள் பலவற்றை அள்ளித்தரும் அறிவியல் பல ஆபத்துகளுக்கும் நம்மை ஆளாக்குகின்றது.
இதை பல நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நமக்கு நினைவூட்டிக்கொண்டு இருக்கின்றன. தற்போது தமிழகத்திலும் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு பற்றி தெரியவந்துள்ளது.
பொது விநியோக அமைப்பில் (PDS) இருந்து பலரது தரவுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது.
தமிழகத்தின் (Tamil Nadu) பொது விநியோக அமைப்பின் திட்ட விவரங்களை ஹேக்கர்கள் இணையத்தில் லீக் செய்துள்ளன. இதில், சுமார் 49,19,668 பேரது ஆதார் அட்டை விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த தகவலை டெக்னிசாங்க்ட் என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த விவரங்களை வெளியிட்ட இந்த நிறுவனம், கடந்த மாதம் (ஜூன் 28) இந்த ஹேக்கிங் நடந்ததாக கூறியுள்ளது.
சுமார் 52 லட்சம் பயனர்களின் தரவை கசிய வைக்கக்கூடிய ஒரு இணைப்பு, ஜூன் 28 அன்று பிரபல ஹேக்கர் இணையம் ஒன்றில் பதிவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை சுமார் 49,19,668 ஆதார் எண்களை உள்ளடக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பலரது முக்கிய தகவல்கள், தனிநபர்களை அடையாளம் காணக்கூடிய தகவல் பிஐஐ, அட்டைதாரர்களின் ஆதார் எண், அவர்களின் தனிப்பட்ட மற்றும் உறவினர் விவரங்கள் என பல முக்கிய விவரஙள் ஒரு பிரபல ஹேக்கிங் தளத்தில் (Hacking Platform) விற்பனைக்கு உள்ளதாக டெக்னிசான்ட் தெரிவித்துள்ளது. அரசுசார் வலைத்தளமான Tnpds.gov.in, சைபர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகவும், இது ஒரு சைபர் கிரிமினல் குழுவால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் பல கோடி பயனாளிகளின் தகவல்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.