பிரிட்டிஷ் கொலம்பியாவில் மற்றுமொரு வதிவிடப்பாடசாலை புதைகுழியொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அண்மைய நாட்களில் கனடாவின் பல்வேறு பகுதிகளில் றோமன் கத்தோலிக்க தேவாலயங்களினால் நடாத்தப்பட்டு வந்த வதிவிடப்பாடசாலைகளில் கற்ற பழங்குடியின சிறார்கள் இனச் சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.
நிலத்தை ஊடறுத்துச் செல்லக்கூடிய ராடர்களின் உதவியுடன் இந்த புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் க்ரான்புருக் பகுதியில் அமைந்துள்ள வதிவிடப்பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் இந்த புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
182 புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றின் கல்லறை கற்கள் எதுவும் இருக்கவில்லை எனவும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கல்லறை கற்கள் இல்லாத காரணத்தினால், இந்த புதைகுழிகளில் புதைக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
காம்ப்லூப்ஸ் வதிவிடப் பாடசாலையில் அண்மையில் 215 பழங்குடியின சிறார்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டதுடன், கவ்ஸீஸில் வதிவிடப் பாடசாலையொன்றுக்கு அருகாமையில் சுமார் 751 அடையாளப்படுத்தப்படாத புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.
சுமார் ஒன்றரை லட்சம் பழங்குடியின சிறார்கள் றோமன் கத்தோலிக்க தேவாலயங்களினால் நிர்வாகம் செய்யப்பட்ட வதிவிடப்பாடசாலைகளில் கல்வி கற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.