மதிப்பீடுகளின்படி சுமார் 100 நாடுகளில் COVID-19 இன் டெல்டா மாறுபாடு இருப்பதைக் குறிப்பிட்டு, உலக சுகாதார அமைப்பு (WHO) அதிக அளவில் பரவக்கூடிய இந்த திரிபு வரவிருக்கும் மாதங்களில் உலகளவில், கொரோனா வைரஸின் மிக அதிக ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக மாறும் என்று எச்சரித்தது.
ஜூன் 29, 2021 நிலவரப்படி, WHO தனது COVID-19 வாராந்திர தொற்றுநோயியல் புதுப்பிப்பில், “96 நாடுகள் டெல்டா மாறுபாட்டின் நோயாளிகள் இருப்பதாகப் புகாரளித்துள்ளன. இருப்பினும் இது மாறுபாடுகளை அடையாளம் காணத் தேவையான வரிசைமுறைத் திறன்கள் குறைவாக இருப்பதால் இது குறைத்து மதிப்பிடப்படுகிறது. இந்த மாறுபாட்டினால், இந்த நாடுகளில் நோய்த்தொற்று அதிகமாகி மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கப்படுவதும் அதிகமாகியுள்ளது” என்று கூறியுள்ளது.
பரிமாற்றத்தின் அதிகரிப்பு காரணமாக, டெல்டா மாறுபாடு (Delta Variant) “மற்ற வகைகளை விட தீவிரமாக மாறுபாடாக மாறுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன” என்று WHO எச்சரித்தது.
டெல்டா மாறுபாடு உட்பட தற்போதைய வகைகளை சமாளிப்பதற்கான கருவிகள் முந்தைய வகைகளைப் போலவே இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியது. “தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து நாம் கடைபிடித்து வரும் தனிமனித இடைவெளி, பொது சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவை டெல்டா மாறுபாடு உட்பட தற்போதைய வகைகளுக்கு எதிராக செயல்படுகின்றன,” என்று அறிக்கையில் மேலும் கூறப்பட்டது.
கடந்த வாரம், உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், டெல்டா மாறுபாடு இதுவரை அடையாளம் காணப்பட்ட வகைகளில் மிகவும் அதிகமாக பரவக்கூடியது என்றும், இது மக்களிடையே வேகமாக பரவுகிறது என்றும் கூறினார்.
“உலகளவில் தற்போது டெல்டா மாறுபாட்டைப் பற்றி பலவகையான அச்சம் உள்ளது என்பதை நான் அறிவேன். WHO அதைப் பற்றியும் கவலை கொண்டுள்ளது. இதுவரை அடையாளம் காணப்பட்ட வகைகளில் டெல்டா அதிகமாக பரவக்கூடியது. இது மக்களிடையே வேகமாக பரவுகிறது, ”என்று கெப்ரேயஸ் கூறினார்.