அனைத்து மாணவர்களுக்கும் இணையக் கல்வி சம அளவில் கிடைக்காமையால், பாடசாலை மாணவர்களின் உரிமை மீறப்படுவதாக தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்துள்ளது.
மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட கிளை அலுவலகத்தில் இன்று இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, கிழக்கு மாகாண கல்வி செயலாளர் கிறிஸ்டி பெர்ணாந்து, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் M.T.A. நிசாம் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் சுமார் 38 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் குறிப்பிட்டார்.
113 பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் கல்வி நடவடிக்கையில் ஆக்கபூர்வமான நிலைகள் எடுக்கப்படாமையை இட்டு நாம் கடும் ஆட்சேபனை தெரிவிக்கின்றோம் . இந்த பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்வதற்கு இந்த அரசு முயல வேண்டும். இலங்கை பூராகவுமுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய நிலையங்களில் இந்த முறைப்பாடு செய்யப்படுகின்றது . ஒன்லைன் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில், பெரும்பாலான மாணவர்களுக்கு சம வாய்ப்பு இல்லாத நிலை காணப்படுகின்றது
என பொன்னுத்துரை உதயரூபன் கூறினார்.