” மக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றாவிடின் நாட்டில் மற்றுமொரு கொரோனா அலை ஏற்படுவதை தடுக்க முடியாது.” – என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இன்று தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது ‘டெல்டா’ திரிபு தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” டெல்டா திரிபு அடையாளம் காணப்பட்ட நாடுகளில், எடுத்த எடுப்பிலேயே வைரஸ் தொற்று வேகமாக பரவியதற்கான சான்று இல்லை. கட்டங்கட்டமாகவே பரவி, பாரியதொரு அச்சுறுத்தல் நிலையை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் பரவலின் வேகம் என்பது எமது நடத்தையின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படும். நாம் இடமளித்தால்தான் அது பரவும். எனவே, சுகாதார நடைமுறைகளை பின்பற்றாவிடின் எதிர்காலத்தில் அலையொன்று உருவாவதை தடுக்க முடியாது.” – எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.