காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும். பெங்களூரு குடிநீர் தேவைக்காக, அணை கட்டுவதாக கூறுவதை ஏற்க முடியாது’ என, கர்நாடக முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட, கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.’அணை கட்டும் திட்டத்தால், இரு மாநிலங்களும் பயன்பெறும். திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், ஒத்துழைப்பு கொடுங்கள்.’தமிழக விவசாயிகள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டர்கள். தேவைப்பட்டால், அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு நடத்தலாம்’ என, முதல்வர் ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.
எடியூரப்பாவின் கடிதத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று எழுதிய பதில் கடிதம்:மேகதாது அணை கட்டினால், தமிழகத்திற்கு வரும் காவிரி நீர்வரத்து குறையும். இது, தமிழக விவசாயிகள் நலனை பாதிக்காது என்று கூறுவதை ஏற்க முடியாது.பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக அணை கட்டப்படுவதாக கூறப்படுகிறது. பெங்களூருரில் இருந்து அணை நீண்ட தொலைவில் உள்ளது.பெங்களூரு நகரின் குடிநீர் தேவை, 4.75 டி.எம்.சி., என்ற நிலையில், 67.16 டி.எம்.சி., சேமிப்பு திறன் உடைய அணை கட்டுவதை ஏற்க முடியாது.பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு ஏற்கனவே, பல்வேறு திட்டங்கள் உள்ளன.
இந்த அணை தமிழகத்திற்கான நீர்வரத்தை முற்றிலும் பாதிக்கும்.தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நீரின் வாயிலாக, காவிரி பாசன அமைப்பின் செயல்திறனை மேம்படுத்த முடியவில்லை. அணை கட்டினால், மேலும் பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும். மேகதாது அணையை, தமிழக விவசாயிகள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். எனவே, அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும். தமிழகம் – கர்நாடகா இடையே நல்லுறவு தழைக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.