ரஷ்யாவில் காணாமல் போன பயணிகள் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய இடர்முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.
AN-26 இலக்கம் கொண்ட குறித்த விமானம், ரஷ்யாவின் Kamchatsky பகுதியில் இருந்து Palana பகுதியை நோக்கிப் பயணித்த நிலையிலேயே, இவ்வாறு காணாமல் போயிருந்தது.
குறித்த விமானத்தில் 22 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்கள் அடங்கலாக 28 பேர் பயணித்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்த குறித்த விமானம் உயரமான பாறையொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், விமானம் விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் குறித்த பகுதியில் மேக மூட்டத்துடனான வானிலை காணப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை. சோவியத் யூனியன் காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட குறித்த விமானம், 1982 ஆம் ஆண்டு முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.