இலங்கையில் எரிபொருள் விநியோகத்துக்கான பொறுப்பை சீனாவுக்கோ அல்லது வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கோ வழங்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை – என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே,
” நாட்டில் எரிபொருள் விநியோகத்துக்கான நடவடிக்கை சீன நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது என சமூகத்தில் கதை அடிபடுகின்றது. சமூகத்தில் கதைக்கப்படும் விடயங்கள் இந்த ஆட்சியின்கீழ் நடந்தும் உள்ளன. இது உண்மையா என்பதை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு உண்மையாக இருந்தால் மின்விநியோக பொறுப்பும் சீன வசமாகும்.” – என்று சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில,
” சீனாவுக்கோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கே எரிபொருள் விநியோக நடவடிக்கையை ஒப்படைப்பது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் கலந்துரையாடல்கூட இடம்பெறவில்லை. இதனை மிகவும் பொறுப்புடனேயே கூறுகின்றேன்.” – என்றார்.