பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் விரிவாக்கம் நேற்று மாலை நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பல பெயர்கள் ஊகிக்கப்பட்டது.
இறுதியாக மத்திய அமைச்சரவையில் (Central Government) இடம் பெறவுள்ள 43 அமைச்சர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியானது. அமைச்சரவை விரிவாக்கத்திற்கு (Cabinet Reshuffle) முன்னதாக, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவர், குழந்தைகள் மற்றும் பெண்கள் அமைச்சர் தபாஸ்ரீ சவுத்ரி, ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, இணை அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே, ராவ் சாகேப் ஆகிய அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மீனாக்சி லேகி, அனுப்ரியா படேல், ஷோபா கரந்தலஜே உள்ளிட்ட 7 பெண்கள் புதிதாக அமைச்சர் பதவியேற்றுள்ளனர்.
ஏற்கெனவே அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் ஆகியோருடன் சேர்த்து பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக பிரதமர் மோடியின் முதல் ஆட்சியில், ஒன்பது பெண் அமைச்சர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் நேற்று 43 அமைச்சர்கள் புதிதாகப் பதவியேற்கின்றனர். அதில், 20 தலித் அமைச்சர்கள், 12 பேர் எஸ்சி பிரிவினர், 8 பேர் எஸ்டி. இவர்களில் மொத்தமாக ஐந்து பேர் கேபினட் அமைச்சர்களானார்கள். பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 27 அமைச்சர்கள் புதிதாகப் பதவியேற்றனர். இவர்களில் ஐந்து பேர் கேபினட் அமைச்சர்கள். அதேபோல 11 பெண்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.
இவர்களில் முன்னாள் முதலமைச்சர்கள் 4 பேர், முன்னாள் மாநில அமைச்சர்கள் 18 பேர், வழக்கறிஞர்கள் 13 பேர், மருத்துவர்கள் 6 பேர், இன்ஜினியர்கள் 5 பேர், முன்னாள் அரசு அதிகாரிகள் 7 பேர். இந்தப் பட்டியல் அனைத்து சாதியினருக்கும் பல்வேறு மாநிலத்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அமைந்துள்ளது.