ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலையில் 58 ஆண்டுகளாக தமிழ்ததுறை இயங்கி வருகிறது.அங்கு பணிபுரிந்த உல்ரிக்க நிக்லாஸ், 2020 செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.
அதன்பின், நிதிப் பற்றாக்குறை காரணமாக தமிழ் பிரிவை மூடுவதாக பல்கலை நிர்வாகம் அறிவித்தது.தமிழ்த் துறைக்கு தேவையான நிதியில் 1.25 கோடி ரூபாயை, தமிழக அரசு சார்பில் அளிப்பதாக முந்தைய ஆட்சியாளர்கள் 2019ல் அறிவித்தனர். அந்தத் தொகை விடுவிக்கப்படாமல் இருந்தது. இதை அறிந்த முதல்வர், உடனடியாக அந்தத் தொகையை வழங்க உத்தரவிட்டார். இதற்காக ஜெர்மனியில் உள்ள, ஐரோப்பா தமிழர்கள் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
முதல்வருக்கு அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘தமிழுக்கான அங்கீகாரத்தை உலக அரங்கில் அளிப்பதோடு, தமிழ் மொழியின் தொடர் பயன்பாட்டிற்கும், முன்னேற்றத்துக்கும் வலுசேர்த்து, பல சர்வதேச பல்கலையில் தமிழ் இடம்பெறும் வகையில் இந்த நிதியுதவி அமைந்துள்ளது’ என தெரிவித்துள்ளனர்.கொலோன் பல்கலையின் ஓய்வு பெற்ற மூத்த தமிழ் பேராசிரியர் உல்ரிக்க நிக்லாஸ், முதல்வருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.