ஈராக்கின் நஸ்ரியா நகரில் கொரோனா வைரஸ் நோயாளிகளிற்கு கிசிச்சையளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த தீவிரகிச்சை பிரிவில் ஒக்சிசன் சிலிண்டர்கள் வெடித்ததால் தீ மூண்டது என வைத்தியர் அமார் அல் ஜமாலி தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் ஏற்பட்ட பாரிய தீயை சிவில் பாதுகாப்பு படையினர் மருத்துவமனை பணியாளர்கள் அருகில் உள்ள தொண்டர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர் என மருத்துவர் ஜமாலி தெரிவித்துள்ளார்.
தீவிபத்து ஏற்பட்டவேளை எத்தனை பேர் மருத்துவமனையில் இருந்தனர் என தெரிவிக்க மறுத்துள்ள வைத்தியர்கள் உள்ளே சிக்குண்டுள்ளவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பின்னர் நோயாளிகளிற்கு சிகிச்சை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட மருத்துவமனையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையிலிருந்து கருகிய நிலையில் உடல்கள் கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பலர் உள்ளே சிக்குண்டிருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் தீபரவியதை தொடர்ந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அதிகாரிகள் பதவி விலகவேண்டும் என சமூக ஊடகங்களில் பதிவிட்டுவருகின்றனர்.
ஏப்பிரல் மாதத்தில் பக்தாத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 80க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.