நீட் தேர்வால் பணம் இல்லாத விவசாய குடும்பத்தில் பிறந்த ஏழை எளியோர்களும் மருத்துவர்களாக தேர்வாக முடிகிறது எனவும், நீட் தேர்வு ஏழைகளுக்கான வரப்பிரசாதம் எனவும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை இன்று (ஜூலை 16) பொறுப்பேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது: எனது எண்ணம், சொல், செயல் அனைத்தும் தமிழகத்திற்காகவே இருக்கும். திமுக ஆட்சிக்கு வந்து 70 நாட்கள் ஆகியுள்ளது. குற்றம் சொல்லியே அரசியல் நடத்திவரும் திமுக இதுவரை ஒரு வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு நடக்காது என்றனர். ஆனால் நிறைவேற்றவில்லை. 2006 முதல் 2016 வரை தமிழகத்தில் 29,725 மருத்துவ மாணவர்கள் தேர்வானார்கள். அதில் சராசரியாக ஆண்டுக்கு 19 பேர் மட்டுமே கிராமப்புற மாணவர்கள் தேர்வாகினர். ஆனால், நீட் தேர்வு வந்தபிறகு சென்ற ஆண்டு மட்டும் 430 கிராமத்தில் படித்த மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
எதற்காக நீட் வேண்டாம் என சொல்கின்றனர் என்பது தெரியவில்லை. பணம் இல்லாத என்னைப்போன்ற விவசாய குடும்பத்தில் பிறந்த மற்றும் ஏழை எளியவர்களுக்கு நீட் மிகப்பெரிய வரப்பிரசாதம். மூலை முடுக்கெல்லாம் சென்று அனைத்து மக்களையும் சந்தித்து நீட் நல்லது என்பதை எடுத்து சொல்வோம். 2021-ம் ஆண்டு முடிவதற்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் 66 கோடி தடுப்பூசிகளுக்கு ரூ.14 ஆயிரம் கோடி செலவில் ஆர்டர் செய்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள நிறுவனம் மேலும் 30 கோடி தடுப்பூசிகள் வழங்குவதாக கூறியுள்ளது. ஆகவே, 96 கோடி டோஸ்களை மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது.
மாநிலம் போட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை, அங்குள்ள கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை, எவ்வளவு தடுப்பூசிகள் தேவை போன்ற விகிதாசாரத்தின் அடிப்படையில் தான் மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குகிறது. ஆனால், மத்திய அரசு தடுப்பூசி வழங்குவதில்லை என திமுக அரசு கூறிவருகிறது. தமிழகத்திற்கு முறையான ஒதுக்கீட்டு முறையை தாண்டி கூடுதல் தடுப்பூசிகள் பெற தமிழக பா.ஜ., வலியுறுத்தும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களால் தமிழகத்தில் உள்ள 3.5 கோடி மக்கள் ஏதோ ஒருவகையில் பயன்பெற்று வருகின்றனர். அந்த பயனாளிகளை நேரடியாக சந்தித்து பா.ஜ., சாதனைகளை கூறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.