தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஷூமா ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து அங்கு கடந்த ஒரு வாரமாக வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.
ஜேக்கப் ஷூமா மீது 2009-2018 ஆண்டு வரை எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகின்றன. ஆனால், இதுவரை ஷூமா தன் தரப்பில் அந்த குற்றச்சாட்டுகளை மறுக்காமலும் தன் சாட்சியத்தை அளிக்காமலும் இருந்ததால், ஜூலை 7 ஆம் திகதி நீதிமன்ற அவமதிப்பிற்காக 15 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
தற்போது அவர் சிறையில் இருக்கும் நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஆயுதங்களுடன் இருப்பதால், அரசிற்கு பெரும் பிரச்சினையாகி வருகிறது. போராட்டக்காரர்களின் வன்முறை, அரசு நடவடிக்கைகளில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை பொலிஸார் 2,500-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து, 1488 வழக்குகளை பதிவு செய்துள்ளதோடு தேடுதலில் பிடிபட்ட 2 முக்கிய குற்றவாளிகளிடமிருந்து 4000 தோட்டாக்களையும் உரிமம் பெறாத துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் நாட்டின் பொருளாதார இழப்பை சரி செய்வதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் திறக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களான மருந்துகள், உணவுப்பொருட்கள், எரிபொருட்கள் கொண்டு செல்லப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், கலவரத்தை கட்டுப்படுத்த 25,000 பாதுகாப்பு படையினரை அரசாங்கம் ஈடுபடுத்தியுள்ளது.