பாராத லக்ஷமன் பிரேமசந்திர கொலை வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை பெற்ற கைதியான துமிந்த சில்வாவை ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்த ஜனாதிபதியின் நடவடிக்கையை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பாரத லக்ஷமன் பிரேமசந்திரவின் மகளுமான ஹிருணிகா பிரேமசந்திர உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதியின் செயற்பாடு அரசியல் யாப்புக்கு முரணானது என அறிவிக்கும் படி கோரியே அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பை செல்லுபடியற்றதாக்கி அறிவிப்பு விடுக்குமாறு ஹிருணிகா தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதிகளால் துமிந்த சில்வா குற்றவாளி என அறிவித்து தண்டனை வழங்கியதாகவும் அதன் பின் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதனை உறுதி செய்ததாகவும் ஹிருணிகா தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி சார்பில் சட்ட மா அதிபர், நீதி அமைச்சர் அலி சப்ரி, பிரதம நீதியரசர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தில் உள்ள அரசியல் யாப்பு விதிமுறைகளை மீறி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குற்றவாளியான துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக ஹிருணிகா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.