அவுஸ்திரேலியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவற்காக விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். மெல்பேர்ன், பிரிஸ்பேர்னிலும் போராட்டங்கள் இடம்பெற்றன.
சிட்னியின் டவுன் ஹாலுக்கு வெளியே கூடிய சில எதிர்பாளர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை பொலிஸார் கைதுசெய்தனர்.
இதுதொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தனிநபர்கள் மற்றும் குழுக்களின் சுதந்திரமான பேச்சு அமைதியான கூட்டத்திற்கான உரிமைகளை அங்கீகரிக்கிறது. இருப்பினும், இன்றைய எதிர்ப்பு தற்போதைய கொவிட்-19 பொது சுகாதார உத்தரவுகளை மீறுவதாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொற்று உயர்வு காரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கம், நாடு முழுவதும் மீண்டும் முடக்கநிலை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தீவிரமாக பரவும் டெல்டா மாறுபாட்டினால், எல்லை மூடல், தனிமைப்படுத்தல் திட்டங்கள், முடக்கநிலை என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொற்று பரவலை கட்டுப்படுத்த வழிவகுக்கும்.
ஏனைய வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், அவுஸ்திரேலிய தடுப்பூசி வீதம் 14 ஆகவே காணப்படுகிறது.