நாட்டில் Covid 19 தொற்று காரணமாக சுமார் 4 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளமையானது அரசாங்கம் செய்த பாரிய குற்றமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரசாங்கத்திற்கு தடுப்பூசிகளை வழங்குவதில் உரிய கொள்கையொன்று காணப்படவில்லை எனவும் மரண எண்ணிக்கையை குறைவாக காண்பிப்பதே அவர்களின் நோக்கமாக இருந்ததாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டுகின்றார்.
அத்துடன் தற்போது தடுப்பூசிகளை வழங்குவதில் வர்த்தக நோக்கம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
சீனாவின் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட பலர், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில் குறித்த தடுப்பூசியின் வெற்றி குறித்து பாரிய சிக்கல் நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..
இதன்படி வர்த்தக நோக்கம் கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், இவ்வாறான தடுப்பூசிகளை தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.