மக்கள் பாதுகாப்புடன் நிம்மதியாக உறங்குவதற்கு, ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் உதவுகிறது’ என, அதை தயாரிக்கும் என்.எஸ்.ஓ., குழுமம் தெரிவித்துள்ளது.
மேற்காசியாவின் இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ., குழுமத்தின் ‘பெகாசஸ்’ மென்பொருள் வாயிலாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகளின் மொபைல் போன் உரையாடல்கள் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து இஸ்ரேல் அரசு பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளது.
இது குறித்து என்.எஸ்.ஓ., செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:பெகாசஸ் மென்பொருள் தனி நபர்களுக்கு விற்கப்படுவதில்லை. அரசுகளுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. பயங்கரவாத அமைப்புகள், போதை மருந்து கடத்தல் கும்பல்கள், சிறார் ஆபாச குழுக்கள் போன்றவற்றின் குற்றச் செயல்களை கண்காணித்து தடுக்க, பெகாசஸ் உதவுகிறது.
இத்தகைய குற்றங்களுக்கான திட்டங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் குறுந்தகவல்கள் மூலம் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன; இவை ‘என்கிரிப்ட்’ எனப்படும் தொழில்நுட்பத்தில் பகிரப்படுவதால் அவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு உரிய ஒழுங்குமுறை சட்டங்கள் இல்லை. இத்தகைய சூழலில் தான் பெகாசஸ் போன்ற உளவு மென்பொருள்கள், புலனாய்வுத் துறைக்கும், சட்ட அமலாக்க அமைப்புகளுக்கும் உதவுகின்றன. இதன் வாயிலாக குற்றச் செயல்கள் கண்காணிக்கப்பட்டு, தடுக்கப்படுகின்றன.
இதனால் உலகில் லட்சக்கணக்கான மக்கள் இரவில் நிம்மதியாக உறங்குகின்றனர். பெகாசஸ் வாயிலாக எங்களால் முடிந்த அளவிற்கு பாதுகாப்பான உலகை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுஉள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்கா கண்டிப்பு
அமெரிக்காவின் தெற்கு ஆசிய பிராந்தியத்துக் கான வெளியுறவு உதவி செயலர் டீன் தாம்சன் கூறியதாவது:இந்தியாவில் ‘பெகாசஸ்’ வாயிலாக அரசியல் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டனரா என்பது பற்றி தெரியாது. ஆனால், இதுபோன்ற உளவு தொழில்நுட்பத்தை அரசை விமர்சிப்போர், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு எதிராக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. இது, கவலைக்குரிய விஷயம்; சட்டவிரோதம். இவ்வாறு அவர் கூறினார்.