Home இலங்கை மலையக சமூகம் எவ்வாறு வளர்ச்சி பெற வேண்டும் – மனோ கணேசன்

மலையக சமூகம் எவ்வாறு வளர்ச்சி பெற வேண்டும் – மனோ கணேசன்

by Jey

மலையக தமிழ் சமூகம் இன்று சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளவும், சமூகம் எழுச்சி பெறவும் மலையகத்தின் முக்கிய நான்கு சமூக கூறுகளான அரசியல் செயற்பாட்டாளர்கள், சட்டத்துறை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தொழில் வர்த்தகதுறை செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கூட்டிணைந்து செயற்பட வேண்டும்.

ஒவ்வொன்றும் தமக்குரிய பணியை கூட்டுபொறுப்படன் நிறைவேற்ற வேண்டும். இதுவே மலையகத்தின் இன்றைய தேவை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

மலையக சட்டத்துறை மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது மனோ எம்பி மேலும் கூறியதாவது,

முழு இந்திய வம்சாவளி மலையக தமிழர்களும் வீட்டு பணியாளர்களும் அல்ல. முழு இந்திய வம்சாவளி மலையக தமிழர்களும் தோட்டத்தொழிலாளர்களும் அல்ல. இப்படியான ஒரு கருத்தை ஒருசில இனவாதிகள் நிறுவ முயல்கிறார்கள். இப்படிதான் ஒருகாலத்தில் அமெரிக்காவில் வெள்ளை இன ஆதிக்கவாதிகள், கறுப்பு இனத்தவரை சித்தரிக்க முயன்றார்கள். இது சூட்சுமம் நிறைந்த கருத்து. இலங்கையிலும் இது திட்டமிட்டு பரப்பப்படுகிறது.

இதுபற்றி நான் எப்போது சுட்டிகாட்டி வந்துள்ளேன். அதை இப்போதும் நான் எடுத்து சொல்கிறேன். முதலில் நாம் ஒன்றுகூடி இந்த கருத்தை முறியடிக்க வேண்டும். இதை எப்படி அமெரிக்காவில் கறுப்பு இனத்து செயற்பாட்டாளர்கள் முறியடித்தார்களோ, அப்படியே நாமும் முறியடிக்க வேண்டும்.

மலையக சமூகம் இன்று வளர்ந்து வருகிறது. இங்கே இன்று அமைச்சர்களும், எம்பீக்களும், ஏனைய உள்ளூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளும் இருக்கின்றார்கள். சட்ட வல்லுனர்களும், வளர்ந்த இளைய சட்டத்தரணிகளும் இருக்கின்றார்கள்.

தொண்டு நிறுவன போராளிகளும், பேராசிரியர்களும், கல்வியாளர்களும் அடங்கிய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இருக்கின்றார்கள். தலைநகரம் முதல் நாடு முழுக்க விரவி பரவியுள்ள வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், தனியார் துறை ஊழியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் அடங்கிய தொழில் வர்த்தகதுறை செயற்பாட்டாளர்கள் இருக்கின்றார்கள். ஆகவே மலையக தமிழர் இன்று ஒரு தேசிய சிறுபான்மை இனமாக, பல்வேறு அடக்கு முறைகள் ஒடுக்கு முறைகளுக்கு மத்தியில் வளர்ந்து வருகின்றனர்.

மலையக தமிழ் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய ஒரு பிரிவினரானதான் இரண்டு இலட்சம் தோட்டத்தொழிலாளர்கள் ஆவர். இவர்களை கைத்தூக்கி விட வேண்டிய கடப்பாடு, வேறு எவரையும் விட, மேற்சொன்ன மலையக சமூகத்தின் முன்னேறிய அரசியல், சட்டத்துறை, சிவில் சமூக, தொழில் வர்த்தகதுறை செயற்பாட்டாளர்களுக்கு இருக்கின்றது. இன்றைய தேவை, மலையக அரசியல், சட்டத்துறை, சிவில் சமூக, தொழில் வர்த்தகதுறை செயற்பாட்டாளர்களின் கூட்டிணைந்த செயற்பாடாகும். ஒவ்வொன்று பிரிவினரும் தமக்குரிய பணியை கூட்டுபொறுப்படன் நிறைவேற்ற வேண்டும்.

சகோதர இனங்களை சார்ந்த விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில நல்ல மனம் கொண்ட முற்போக்காளர்களை தவிர வேறு எவரும் எமக்கு உதவ மாட்டார்கள். எம்மை எள்ளி நகையாட மட்டுமே பலருக்கு முடியும். எம்மை அவமானப்படுத்த மட்டுமே பலருக்கு முடியும். ஆகவேதான் எம்முடன் எவரும் விளையாட வேண்டாம் என நான் எப்போதும் எச்சரிக்கிறேன். எம்மை அவமானப்படுத்த நினைத்தோருக்கு பகிரங்கமாகவே நான் பதிலடி கொடுக்கிறேன்.

பின்தங்கிய இரண்டு இலட்சம் தோட்டத்தொழிலாளர்களுக்கு, எமது நான்கு ஆண்டு ஆட்சிகாலத்தில், அதற்கு முற்பட்ட நாற்பது வருட காலத்தில் நடைபெறாத பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்தோம். எமது மக்கள் வளர்ந்தார்கள். தூரதிஷ்டவசமாக எமது ஆட்சி இடை நின்று விட்டது. அது முடிவு இல்லை. நாம் மீண்டும் முன்பை விட பலமாக எழுந்து வருவோம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

related posts