Online கற்பித்தலில் இருந்து விலகி ஆசிரியர், அதிபர்கள் இன்று (29) 18 ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பளப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைக்காதமையால் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24 வருடங்களாக நிலவும் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்றும் நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதித் தீர்மானம் எட்டப்படும் என பிரதமர் கூறுகின்ற போதிலும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், உரிய தீர்வு காணப்படாத பட்சத்தில் தமது தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக பல்வேறு குழுக்களை நியமித்தும், பரிசீலனைகளை மேற்கொண்டும் அரசாங்கம் காலம் தாழ்த்துவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசிரியர், அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாத பட்சத்தில், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.