தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், ‘அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். வேளாண்மைக்கு முதன்முதலாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்’ என அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், 2021 – 2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் குறித்து, நிதி அமைச்சர் மற்றும் நிதித் துறை அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஆக.,03) ஆலோசனை நடத்தினார்.
மேலும், இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்தும், பட்ஜெட் தாக்கல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதன் முடிவில், ஆக.,13ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பாக சட்டசபை செயலர் சீனிவாசன் கூறுகையில், ‛வரும் ஆக.,13ம் தேதி தமிழக பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வார்,’ என்றார்.