காங்கிரஸ் உள்ளிட்ட ஐந்து கட்சிகளுக்கு, 2019 – 20ம் ஆண்டில் கிடைத்த டொனேஷன்’களைவிட, பா.ஜ.,வுக்கு மூன்று மடங்கு அதிகமாக கிடைத்துள்ளது.
தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தன்னார்வ அமைப்பு, அரசியல் கட்சிகளின், வரவு – செலவு கணக்குகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் கமிஷனிடம், 2019 – 20ம் ஆண்டில் தங்களின் வரவு – செலவு விபரங்களை தாக்கல் செய்துள்ளன.
அதில், காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு டொனேஷனாக, 228 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
ஆனால், இதே காலகட்டத்தில் பா.ஜ.,வுக்கு, 785 கோடி ரூபாய் டொனேஷனாக கிடைத்துள்ளது. இது ஐந்து கட்சிகள் பெற்ற மொத்த டொனேஷனை விட, மூன்று மடங்குக்கு மேல் அதிகம். தனக்கு, அமராவதி மாநகாராட்சியிடமிருந்து 4.7 லட்ச ரூபாய் கிடைத்துள்ளதாக, பா.ஜ., தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த டொனேஷனில், முகவரி, வங்கியின் பெயர், பான் என், உள்ளிட்ட எந்த விபரமும் குறிப்பிடப்படவில்லை. அத்துடன், 570 பேரிடமிருந்து, 149 கோடி ரூபாயும், சிலரிடமிருந்து நிலங்களும் டொனேஷனாக கிடைத்துள்ளதாக பா.ஜ., குறிப்பிட்டுள்ளது.
காங்கிரஸ், 25 டொனேஷன்கள் வழியாக, 2.69 கோடி ரூபாயும், திரிணமுல் காங்., 42 டொனேஷன்கள் மூலம், 7 கோடி ரூபாயும், தேசியவாத காங்கிரஸ் இரண்டு டொனேஷன்களில் 3 கோடி ரூபாயும் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளன. ஆனால், இந்த டொனேஷன்களில், முகவரி உள்ளிட்ட எந்த விபரங்களையும் கட்சிகள் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.