நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கத் துடிக்கும் தேச விரோதிகள் போல எதிர்க்கட்சிகள் செயல்படுவதாக, பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஏழைகள் நலன் மற்றும் இலவச உணவுப் பொருட்கள் திட்ட நாள் கடைப்பிடிக்கப் பட்டது.
‘வீடியோ கான்பரன்ஸ்’
இதில் பிரதமர் மோடி ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்று, இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைத்தார். இலவச உணவுப் பொருட்களால் பயன் பெறுவோரிடம் கலந்துரையாடினார். இதில் மோடி பேசியதாவது:
கடந்த ஆட்சிக் காலங்களில் ஏழைகளுக்குச் செல்ல வேண்டிய உணவுப் பொருட்கள், கொள்ளை அடிக்கப்பட்டன. தற்போது அந்த நிலை இல்லை. உ.பி.,யில் 80 ஆயிரம் ரேஷன் கடைகள் வாயிலாக 15 கோடி பேருக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இதற்கு மத்திய அரசின் நலத் திட்டங்களின் வெற்றியே சாட்சி.
‘செல்ப் கோல்’
இந்தியா பல்வேறு துறைகளில் வெற்றிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்க, சிலர் அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் வளர்ச்சிக்கு எதிராகவே ‘செல்ப் கோல்’ போட முயற்சிக்கின்றனர்.பார்லி., நடவடிக்கைகளை தொடர்ந்து முடக்கி வருகின்றனர். நாட்டின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என நினைக்கும் தேச விரோதிகளைப் போல எதிர்க்கட்சியினர் செயல்படுகின்றனர்.ஆனால் அவர்களால் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க முடியாது. இந்தியா வளர்ச்சிப் பாதையில் வேகமாக செல்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.