ஆரம்ப காலத்திலேயே தடுப்பூசியை பெற்றுக்கொடுக்காமல் பானையை ஆற்றில் போட்டு பாணிக்கு விளம்பரம் கொடுத்து அரசாங்கம் செயல்பட்டு வந்ததால் இன்று இடம்பெறும் ஒவ்வொரு கொரோனா மரணங்களுக்கும் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு சஜித் பிரேமதாச தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
“நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. டெல்டா வைரஸ் காரணமாக நாட்டின் சுகாதாரத்துறை பாதுகாப்பற்ற நிலையை எட்டியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குறித்து பல மாதங்களுக்கு முன்னர் நாம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். விசேடமாக வைத்திய சங்கங்கள், சுகாதார தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினர் பயணத் தடை தளர்வுகளை நீக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்தனர். ஆனால் அப்படி செய்யாமல் இருந்ததால் இன்று தடுப்பூசி திட்டம் மந்த கதியால் நாளாந்தம் மக்கள் பலியாகி வருகின்றனர்.
பல மாதங்களாக ஆற்றில் பானை வீசி பாணி ஒன்றை தயாரித்து அதை பிரச்சாரம் செய்து மூடநம்பிக்கைகள் ஊடாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய ஊடகங்களைப் பயன்படுத்தி செயல்பட்டனர். இதற்கு பதிலாக அரசாங்கம் தடுப்பூசி திட்டத்தை விரைவாக செயல்படுத்தி இருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. மரணங்கள் அதிகரித்திருக்கிறது. நாங்கள் கூறியது போல நாளொன்றுக்கு 200 தொடக்கம் 300 மரணங்கள் ஏற்படும் என வைத்திய நிபுணர்களும் கூறினர். அரசாங்கம் அதனை கண்டுகொள்ளவில்லை.
இன்று வைத்தியசாலைகளில் நோயாளர் படுக்கைக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. சில வைத்தியசாலையில் நோயாளர்கள் தரையில் உறங்குகின்றனர். அவசர சிகிச்சை பிரிவிற்கு தேவையான உபகரணங்கள் போதுமான அளவு இல்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இது குறித்து அரசாங்கம் என்ன சொல்கிறது? நாட்டு மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா?
ஒவ்வொரு நாட்களும் அத்தனை தடுப்பூசி இத்தனை தடுப்பூசி வருவதாக கூறுகின்றனர். தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் மக்களின் உயிருக்கு ஆபத்து என்பதை அரசாங்கம் உணர வேண்டும். சர்வதேசத்திடம் சென்று தடுப்பூசி உதவி கோருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைக்கிறோம். அதன் மூலமாக கொரோனா மரணங்களையாவது கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.
நாட்டில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாகவே கொரோனா ஏற்படுவதாக அரசாங்கம் காண்பிக்க முயற்சிக்கிறது. நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு சரியான பதில் கொடுத்தால் ஏன் அவர்கள் வீதிக்கு இறங்க போகிறார்கள்? என அரசாங்கத்திடம் கேட்க விரும்புகிறேன். உரம் பிரச்சினையை அரசாங்கம் ஏற்படுத்தியதால் விவசாயிகள் வீதிக்கு வந்தனர். எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்ததால் மீனவர்கள் வீதிக்கு இறங்கினார். தடுப்பூசி திட்டம் முறையாக இடம் பெறாத காரணத்தால் மக்கள் வீதிக்கு இறங்கினர். ஒன்லைன் கல்விமுறை முறையாக இடம்பெறாத காரணமாக மக்கள் வீதிக்கு இறங்கினர். ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதி அடிப்படையில் அவர்களுடைய சம்பள முரண்பாட்டை தீர்க்காததன் காரணமாக அதிபர்கள் ஆசிரியர்கள் வீதிக்கு இறங்கினர். மத்திய தர வர்க்கத்தினர் வருமானம் இல்லாதவர்கள் தங்களுக்கு வாழ வழி தேடி வீதிக்கு இறங்கினர். அரசாங்கம் கூறியபடி பார்த்தால் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோகண திசாநாயக்க, திஸ்ஸ குட்டியாராச்சி, மஹிந்தானந்த அளுத்கமகே போன்றவர்களும் ஆர்ப்பாட்டம் செய்ததாலா கொரோனா வந்தது?
குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு வேலை செய்யாமல் நாட்டு மக்களின் சிறுவர்களின் உயிர்களை பாதுகாக்கும் நோக்கில் தயவுசெய்து லேடி ரிச்வே வைத்தியசாலைக்கு ராகம வைத்தியசாலைக்கு கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு இரத்னபுரி வைத்தியசாலைக்கு களுபோவில வைத்தியசாலைக்கு தேசிய வைத்தியசாலைக்கு சென்று பாருங்கள்.
நோயாளர்களுக்கு வசதி இல்லை, படுக்கை இல்லை, மருந்து இல்லை, உபகரணங்கள் இல்லை, ஆக்சிஜன் இல்லை. நாம் வைத்திய உபகரணங்கள் நன்கொடை செய்துள்ளோம். முதல் தடவையாக எதிர்க்கட்சி மக்களின் நலனுக்காக செயல்படுகிறது. நாம் இந்த நாட்டு மக்கள் மீது அன்பு செலுத்துகிறோம். அதனால் தயவு செய்து மக்களுடைய உயிர்கள் பலியாகும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்கவும். அப்படி செய்யாது தொடர்ந்து நாளுக்குநாள் மரணங்கள் அதிகரித்து சென்றால் அது கொலையாகும். சரியான நேரத்திற்கு தடுப்பூசி வழங்காமல் இடம்பெறும் மரணங்கள் அனைத்திற்கும் இந்த அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.