பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு விநாயகர் கோவில் கடந்த 4-ந் தேதி சூறையாடப்பட்டது. அங்கிருந்த சிலைகளை உடைத்து சேதப்படுத்தியதுடன் கோவிலின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனா். இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதனிடையே, இந்த தாக்குதலை போலீசார் தடுக்க தவறிவிட்டதாக, பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.
அதனை தொடர்ந்து இந்து கோவில் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 150-க்கும் மேற்பட்டோர் மீது பயங்கரவாதம் மற்றும் பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் மர்ம கும்பலால் சேதப்படுத்தப்பட்ட கோவில் புனரமைக்கப்பட்டு இந்து சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பஞ்சாப் மாகாண அரசு தெரிவித்துள்ளது.