அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளவர் நியூயார்க் மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ (63). இவர் மீது சமீபத்தில் சில பெண்கள் கடந்த மார்ச் மாதம் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இது தொடர்பாக தனிநபர் விசாரிக்க அம்மாகாண சபாயகர் உத்தரவிட்டார்.
தன்னுடன் பணி புரிந்த முன்னாள் ஊழியர்கள், பணி புரியும் ஊழியர்கள் மற்றும் வேறு சில பெண்களிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு எதிரான விசாரணையை மேற்கொண்ட நியூயார்க் அட்டார்னி ஜெனரல், லெடிட்டா ஜேம்ஸ், 168 பக்க விசாரணை அறிக்கையை சில தினங்களுக்கு முன்னர் சமர்ப்பித்தார். அதில், நியூயார்க் மாநில அரசு முன்னாள், இந்நாள் ஊழியர்கள் பலருக்கும் ஆண்ட்ரூ கியூமோ அவர்களுக்கு பாலியல் தொந்திரவு அளித்ததாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், தான் யாரையும் விரும்பத்தகாத வகையில் தொடவில்லை என்று கூறி ராஜினாமா செய்ய அவர் மறுப்பு தெரிவித்து வந்தார். அதேசமயம், அவர் பதவி விலக வேண்டும் என்றும் தொடர்ந்து பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான நியூயார்க் மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். “நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். ஆனால், என் மீதான குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கின் அடுத்த ஆளுநராக அந்த மாகாணத்தின் துணை ஆளுநராக உள்ள கேத்தி ஹோக்கல் பதவியேற்கவுள்ளார். அவர் பொறுப்பேற்கும் பட்சத்தில் நியூயார்க் மாகாணத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை அவர் பெறுவார்.