சேதன பசளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஸ் பத்திரன வெளியிட்ட கருத்து பதில் அளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2021-22 பெரும்போக செய்கைக்கு பயன்படுத்தவென சேதன பசளை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.
குறித்த பெரும்போக காலத்திற்கு தேவையான போதியளவு சேதன பசளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால் விவசாய அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது என ரமேஸ் பத்திரன தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள சசீந்திர ராஜபக்ஷ, சேதன பசளை இறக்குமதி செய்ய எமக்கு ஒருபோதும் அமைச்சரவை அனுமதி அளிக்கவில்லை. தற்போது 1% நைட்ரிஜன் அடங்கிய சேதன பசளையும் 3% நைட்ரிஜன் அடங்கிய சேதன பசளையும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது. எமக்கு நைட்ரிஜன் இறக்குமதி செய்யவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நைட்ரிஜன் கலவையுடனான தேசிய உற்பத்தி சேதன பசளை பயன்படுத்தி அம்பாறையில் பெரும்போக செய்கை ஆரம்பிக்க விவசாய அமைச்சு தயார் நிலையில் உள்ளதாக சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.