கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்பில் சுகாதார அமைச்சு வௌியிடும் தரவுகளுக்கும் பிரதேச மட்டத்திலான தகவல்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு உண்மை தகவல்களை மறைக்கிறதா என்ற சந்தேகம் ஆதாரத்துடன் வௌியிடப்படுகிறது.
அண்மையில் இடம்பெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 7000 பேர் வரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கம்பஹா மாவட்டத்தில் வீட்டுக்குள் இருப்பதாக மாவட்ட கொரோனா ஒழிப்பு குழு அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 1ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரை கம்பஹா மாவட்டத்தில் 12,555 கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த குழு தெரிவித்த போதும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வௌியிட்ட அறிக்கையில் குறித்த 9 நாட்களில் 3629 பேர் மாத்திரமே பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி இரு அறிக்கைக்கு இடையில் 8926 வித்தியாசம் காணப்படுகிறது.
9ம் திகதி வரை கம்பஹா மாவட்ட வைத்தியசாலைகளில் 4046 கொரோா நோயாளர்கள் சிகிச்சைப் பெறுவதாக மாவட்ட குழு கூறிய போதும் சுகாதார அமைச்சின் தகவல்படி 3692 பேர் சிகிச்சைப் பெறுகின்றனர். அதிலும் 1506 வித்தியாசம் உள்ளது.
இந்த குழப்பமான நிலை கிழக்கு மாகாணத்திலும் உள்ளது. அரசாங்க தகவல்படி நேற்று முன்தினம் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் 194 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால் அன்றைய தினம் 342 தொற்றாளர்கள் பதிவானதாக மாகாண சுகாதார பணிப்பாளர் கூறியுள்ளார்.
தொற்று நோய் தடுப்புக்கு சரியான தரவுகள் கைவசம் இருக்க வேண்டியது அவசியமாகும். தகவல்களை மறைத்து வழங்கினால் அது தொற்று நோய் ஒழிப்புக்கு பாரிய சவாலாகும். பொய் தகவல்களை வழங்கி இங்கே ஏமாற்றப்படுவது யார் என்ற கடுமையான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.