ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தலிபான் வசமானதை அடுத்து அதிபர் அஷ்ரப் கனி காபூல் நகரை விட்டு வெளியேறினார். இடைக்கால அதிபராக அலி அமகது ஜலாலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கூறப்படுவதாவது:
ஆப்கானில் பல மாகாணங்களை கைப்பற்றி வந்த தலிபான் பயங்கரவாதிகள், தலைநகர் காபூலுக்குள், அனைத்து பகுதிகளில் இருந்தும் நுழைந்தனர். இதனால், அரசு அலுவலகங்களில் இருந்து அலுவலர்கள் வெளியேறினர். அதிகாரத்தை மாற்றுவது தொடர்பாக அதிபர் மாளிகையில் அரசு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகியதுடன் தலைநகர் காபூலை விட்டு வெளியேறி விட்டாதகவும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் இடைக்கால அரசின் அதிபராக அலி அகமது ஜலாலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்காசிய நாடான ஆப்கானின் ஆட்சி அதிகாரத்தை 1991ல் கைப்பற்றிய தலிபான், 2001ல் அமெரிக்க ராணுவத்தால் விரட்டி அடிக்கப்பட்டது.
அதன்பின், ஆப்கானில் ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது. 20 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க படைகள் முழுமையாக ஆப்கானில் இருந்து இம்மாத இறுதியில் வெளியேற உள்ளன. இதையடுத்து ஆப்கானை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் தலிபான் இறங்கியுள்ளது.
கடந்த மூன்று வார சண்டையில் 13 மாகாணங்களை தலிபான் கைப்பற்றியுள்ளது. கிழக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான ஜலாலாபாத்தை தலிபான் தீவிரவாதிகள் இன்று (ஆக., 15) கைப்பற்றினர். அந்த நகரை சண்டையிடாமலே கைப்பற்றியதாக தெரிவித்து உள்ளனர். ஆப்கானில் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன.
தொடர்ந்து, கடும் மோதலில் ஈடுபட்ட தலிபான்கள் காபூல் நகருக்குள் அனைத்து பகுதிக்குள் இருந்தும் நுழைந்தனர். அங்குள்ள கனக்கன், குராபாத் பாக்மான் மாவட்டங்களுக்குள் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக தெரிகிறது. இதனையறிந்த அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் இருந்து வெளியேறினர்.
இதனால், அங்கு இரு தரப்புக்கு இடையே துப்பாக்கி சண்டை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், தாக்குதல் நடத்த விருப்பமில்லை; வலுக்கட்டாயமாக நகரை கைப்பற்ற விரும்பவில்லை எனவும், அமைதியான முறையில் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என தலிபான்கள் கூறிவந்தனர்.
அதற்காக தலிபான் அமைப்பின் பிரதிநிதிகள், ஆப்கன் அதிபர் மாளிகையில் அரசின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
வெளியேறினார் அதிபர்
இந்நிலையில் தலைநகர் காபூலை பல்வேறு பகுதிகளில் இருந்தும் தலிபான் படைகள் சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்ததுடன் காபூலை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை அதிபர் அம்ருல்லா சலேவும் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.